புத்தகம்:- பழங்காலத் தமிழர் வாணிகம்
ஆசிரியர்:- மயிலை சீனி. வேங்கடசாமி
நாட்டின் சரித்திரம் அந்நாட்டை அரசாண்ட மன்னனுடைய வரலாறு மட்டும் அல்ல. அந்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறுதான் சரித்திரமாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதி வாணிகத்தைச் சார்ந்தது. அக்காலத்து வாணிகத்தைக் கூறுகிற இந்நூல் பழந்தமிழர் வரலாற்றில் ஒரு கூறாகும்.
சங்ககாலத்தில் பெரும் பட்டினத்திலும் (கடற்கரை ஊர்கள்), பட்டணத்திலும் (நகரத்தைக் குறிக்கும் சொல்) காசு கொடுத்துப் பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும், ஊர்களிலும், கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே இருந்தது. “பாலோடு வந்து கூழோடு பெயரும் யாடுடை இடையான்..” 221. தலைவி கூற்று- குறுந்தொகை.
👉 பெருஞ்சேரல் இரும்பொறை அரிசில் கிழாருக்கு ‘ஒன்பது நூறாயிரம் காணம்’ பரிசாகக் கொடுத்தான் (பதிற்றுப்பத்து).
👉 இளஞ்சேரல் இரும்பொறை பெருங்குன்றூர் கிழார்க்கு ‘முப்பத்திராயிரம் காணம்’ பரிசாகக் கொடுத்தான்.
👉 பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு சோழன் கரிகாலன் ‘நூறாயிரங்காணம்’ பரிசு வழங்கினான். பட்டினப்பாலையின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு. (காணம் என்பது பொற்காசு).
திருவண்ணாமலை மாவட்டம் ‘செங்கம்’ வட்டம் ஆண்டிபட்டி என்ற இடத்தில் 12 ஈயக்காசுகள் கிடைத்தது. கி.பி 2ஆம் நூற்றாண்டுக்கு முன் சார்ந்த தமிழ் எழுத்துக்கள் உள்ளன. “தின்னன் எதிரான் சேந்தன் அ" என்று எழுதப்பட்டுள்ளது. தின்னனின் எதிரியான சேந்தனுடையது என்று பொருள் கூறலாம். பின்புறம் மலையையும் ஆற்றையும் குறிப்பது போல் கோடுகள் உள்ளன. கி.பி 2ஆம் நூற்றாண்டுக்கு முன் “சேந்தன்” என்ற அரசன் ஆண்டிருக்கிறான். அவன் தன் பெயரைப் பொறித்து காசு வெளியிட்டிருக்கிறான். இதுவே தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்துள்ள காசுகளில் அரசன் பெயரோடு கிடைத்துள்ள மிகவும் பழங்காசு.
சங்ககாலத்து சுங்கச்சாவடி (toll plaza)😎: சங்ககாலத்தில் தரைவழி, கடல்வழி இறக்குமதி, ஏற்றுமதிப் பொருள்களுக்கும் அரசு வரி விதித்தது.
“…அருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல் அணங்கினோன்; புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிமண்டபம் பொதிமூடைப் போர் ஏறி” -பட்டினப்பாலை(வரிகள்: 129-137).
புகார் நகரத்தில், காவல் மிகுந்த சுங்கச்சாவடி இருக்கும் சாலையில், சுங்கத் தீர்வையைப் பெற்றுக்கொண்டு, சோழப் அரசின் இலட்சினையான ‘புலிச் சின்னத்தை’ அடையாளமிட்டு வெளியே அனுப்புவதற்காகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள் மலைபோல் தோற்றம் தரும் என்கிறது இந்த பாடல்.
சங்ககாலத்தில் தரைவழி வணிகத்திற்கு எருதுவும் கழுதையும் மற்றும் கடல்வழி வணிகத்திற்குப் படகு, பாய்மரக் கப்பல்களையும் பயன்படுத்தினர்கள். “அத்திரி” என்னும் ‘கோவேறு கழுதைகளை’ ஊர்தியாக மட்டும் பயன்படுத்தினர். {கோவேறு கழுதை (mule) என்பது பெண் குதிரைக்கும், ஆண் கழுதைக்கும் செயற்கைக் கருவூட்டல் முறையில் தோன்றும் ஒரு இனமே இது}.
தரைவழியாக வாணிகம் செய்த பெரும் வணிகர்க்கு “மாசாத்துவன்” என்று பெயர். கடல்வழியாக வாணிகம் செய்த பெரும் வணிகர்க்கு “மாநாவிகன்” என்று பெயர். வணிகக் கூட்டத்திற்கு ‘வணிகச் சாத்து’ என்று பெயர். வணிகச் சாத்துக்கள் தங்கள் வணிகப் பொருட்களை பாதுகாக்க வில் மற்றும் வால் வீரர்களை உடன் அழைத்துச் சென்றார். இருந்தாலும் அரசு ஆங்காங்கே சுங்கச்சாவடி வைத்து சுங்கம் வசூலித்தனர். கண்ணகியின் தந்தை ஒரு மாநாவிகன். கோவலனுடைய தந்தை ஒரு மாசாத்துவன்.
தொல்காப்பிய காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல்வழி வணிகம் ஈடுபட்டு வந்தனர் என்பதை “முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை.” என்னும் இலக்கணம் மூலம் அரிய முடிகிறது. மேலும், சங்ககாலத்திலும், அதற்கு பின்னரும் மகளிர் கடற்பயணம் செய்ததில்லை என்று தெரிகிறது. “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது தமிழர் வாக்கு.
Periplus of the Erythraean Sea என்னும் கிரேக்க நூலில் சங்ககால தமிழக துறைமுகங்கள் பற்றிக் கூறுகிறது. ‘குணக்கடல்’ (Bay of Bengal), ‘குடகடல்’ (Arabian Sea) மற்றும் ‘குமரிக்கடல்’ (Indian Ocean) வழியே தமிழர் சிறப்பாக வாணிகம் செய்தனர்.
சங்ககால கிழக்கு கடற்கரையோரம் பல வணிகத் தளங்கள்:-
👉 கொல்லத் துறை (வடபெண்ணையாற்றின் தென்கரையில் இருந்தது)
👉 எயிற் பட்டிணம் (எ) சோ பட்டிணம் (இப்போதைய மரக்காணம்)
👉 அரிக்கமேடு (புதுவை) :- அரிக்கமேடுப் பகுதியில் கிடைத்த சாயத்தொட்டி உறைகிணறு, மதுசாடிகள், கண்ணாடி மணிகள், ‘பிராமி எழுத்து உள்ள பாடை ஓடு’, யவன குடியிருப்பின் சுவர் பகுதி உள்ளன. அரிக்கமேடில் கிடைத்த பிராமி எழுத்துக்கள் ‘கிபி முதலாம் நூற்றாண்டு’ எனத் தெரிகிறது. பானை ஓடுகளில் “அண்டிய மகர், அந்தக, ஆமி, ஆதித்தியன்” எனும் தமிழ் பிராமி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். ரோமப் பேரரசனாகிய அகஸ்டஸ் சீசரின் (கிமு. முதலாம் நூற்றாண்டு) தலை உருவம் பொறித்த காசு, மோதிரம் முதலியன கண்டெடுத்துள்ளனர்.
‘அருகன்மேடு- அருக்கன்மேடு-அரிக்கன் மேடு- அரிக்கமேடு’ என அழைக்கப்பட்டு வருவதாக கூறுவர் சிலர். (சமணர்=அருகன்)
👉 காவிரிப்பூம்பட்டினம்:- புகார் என்ற பெயரும், காகந்தி என்ற பெயரும் உண்டு. சோழ நாட்டுக் கப்பல் வணிகர்கள் இங்கிருந்து சாவக நாடு (Java), காழகம் நாடு (Burma), கங்கை துறைமுகத்திற்கு சென்று வாணிகம் செய்தனர்.
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயுனும்.
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின”
- பட்டினப்பாலை (185-193)
(நிமிர்பரிப் புரவி = உயர்வகை குதிரைகள்; இந்தியாவில் குதிரைகள் இல்லை. கருங்கறி=சாவக மிளகு மூட்டை; வடமலை=இமயமலை; குடமலை- மேற்கு தொடர்ச்சி மலை)
👉 தொண்டி (பாண்டிய நாடு)
👉 மருங்கூர்ப் பட்டினம்
👉கொற்கை
👉குமரி
சங்ககால மேற்கு கடற்கரையோரம் வணிகத் தளங்கள்:-
👉மங்களூர்
👉நறவு
👉தொண்டி
👉மாந்தை
👉முசிறி:- மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உண்டான பேரியாறு மேற்குக் கடலில் விழுந்த இடத்தில் முசிறித் துறைமுகம் அமைந்திருந்தது. யவனர்கள் முசிறியை முசிறிஸ் என்று கூறினார்கள். பந்தர்கள் இங்கு முத்து வாணிகம் செய்தனர். ‘பந்தர்’ என்பது அரபு மொழி சொல். பந்தர் என்றால் கடைவீதி என்று பொருள். கிமு விலேயே யவனர்களும், அரேபியர்களுடனும் தமிழர்கள் வாணிகம் செய்தனர்.
சுள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி
- அகம், 149
(பேரியாறு=பெரியாறு; நன்கலம்=நல்ல மரக்கலம்; கறி=மிளகு). பெரிய யவனக் கப்பல் வாணிகர் பொன்னைக் கொண்டு வந்து விலையாகக் கொடுத்து மிளகை வாங்கிக் கொண்டு போனார்கள். அக்காலத்தில் மிளகாய் கிடையாது.
👉வைக்கரை
👉மேல்கிந்த
👉விழிஞம் (ஆய் நாட்டின் துரைமுகம்)
சங்ககால இலங்கை துறைமுகங்கள்:-
👉 மணிபல்லவம் (ஜம்புகொல பட்டினம்):- யாழ்பாணத்துக்கு வடக்கே இருந்த ஒரு சிறு தீவு. வணிக கப்பல்கள் வந்து கோமுகி என்னும் ஏரியிலிருந்து தங்கள் பயணத்திற்கு தேவையான குடிநீர் எடுத்து சென்றனர். மகாவம்சம் இந்த தீவை ஜம்புகொல பட்டினம் என்று குறிப்பிடுகிறது.
👉மாதிட்டை
கரும்பு:-
“..அரும்பெறல் அமிழ்த மன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே”
- புறம் 392:20
அதியமான் அரசன் ஒருவன் வானத்து அமிழ்தம் போன்ற கரும்பைத் தூரதேசத்தில் இருந்து கொண்டுவந்து தமிழ்நாட்டில் பயிரிட்டான் என்று தெரிகிறது
இந்த புத்தகத்தில் பல எண்ணற்ற தகவல்களைத் தந்துள்ளார் மதிப்பிற்குரிய அய்யா மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏