தொல்காப்பியத்தில் கற்பியல்:
"கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்' (1098)
விளக்கம்:- கற்பு எனும் மனத்திண்மை, தலைவன் மீது கொண்ட காதல், நல்லொழுக்கம், பொறுமை எனும் பெருங்குணம், நற்பண்புகளின் நிறை, விருந்தினரைப் பேணிக் காக்கும் தன்மை, சுற்றத்தாரை ஓம்பல் முதலானவை குடும்பத் தலைவியின் பண்புகளாகக் கூறுகின்றார் கற்பியலில் தொல்காப்பியர்.
"தற்புகழ்க் கிளவி கிழவன் முன் கிளத்தல் / எத்திறத் தானும் கிழத்திக்கு இல்லை' (1126)
விளக்கம்:- தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தாரை பற்றியும் வியந்து தலைவன் முன் புகழ்ந்து பேசும் எச்சூழலிலும் தலைவிக்கு இல்லாததொரு பண்பாக எனத் தொல்காப்பியம் கூறுகின்றது.
"செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பா லான' (தொல்.1154)
விளக்கம்:- அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையை உரைக்கும் சொல்வன்மை, நன்மை, தீமையைப் பிரித்தாராயும் அறிவு, அரும் பண்புகள் ஆகியவை பெண்டிரின் குணநலன்களாகத் தொல்காப்பியம் கூறுகின்றது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment