Showing posts with label சங்கத் தமிழ். Show all posts
Showing posts with label சங்கத் தமிழ். Show all posts

பெண் தர மறுத்ததால் பழங் குடிக்கும் ‘வம்ப வேந்தர்களுக்கும்’ போர்

 புறநானூறு 345

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு

திணை: காஞ்சி

துறை: மகட்பாற் காஞ்சி.

பாடியது: அடைநெடுங் கல்வியார் 


பாடல்:- 


களிறு அணைப்பக் கலங்கினகாஅ,

தேர் ஓடத் துகள் கெழுமினதெருவு;

மா மறுகலின் மயக்குற்றனவழி;

கலம் கழாஅலின்துறை கலக்குற்றன;

தெறல் மறவர் இறை கூர்தலின்,            5

பொறை மலிந்து நிலன் நெளிய,

வந்தோர் பலரேவம்ப வேந்தர்,

பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின்

ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி,

கருங் கண் கொண்ட நெருங்கல் வெம்முலை,          10

மையல் நோக்கின்தையலை நயந்தோர்

அளியர் தாமேஇவள் தன்னைமாரே

செல்வம் வேண்டார்செருப் புகல் வேண்டி,

'நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்என;

கழிப் பிணிப் பலகையர்கதுவாய் வாளர்,       15

குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு

கழாஅத் தலையர்கருங் கடை நெடு வேல்

இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ!

என் ஆவது கொல் தானே

பன்னல் வேலி இப் பணை நல் ஊரே!  20


விளக்கம்:-


வேந்தர்கள் அவளை விரும்புகின்றனர். அவளது தந்தை வேந்தர் தரும் செல்வத்தை விரும்பவில்லை. தனக்கு நிகரான போராளிக்குத் தன் மகளை மணம் முடித்துத் தரவே விரும்புகிறான். எனவே போர் மூண்டுள்ளது. பனைமரக் கருக்குமட்டை வேலி [பன் நல் வேலி] கொண்ட அவள் ஊர் என்ன ஆகுமோ?


படையுடன் வந்திருக்கும் புதியவர்கள் பலர்.

  • போர்யானைகள் தழுவுவதால் காடே கலகலத்துப் போயிருக்கிறது.
  • படையெடுத்து வந்த தேர்கள் ஓடுவதால் தெருவெல்லாம் ஒரே புழுதி.
  • படையெடுத்து வந்த குதிரைகள் திரிவதால் எது வழி என்றே தெரியாத நிலை.
  • கறை படிந்த அவர்களின் படைக்கருவிகளைக் கழுவுவதால் துறைநீரே கலங்குகிறது.
  • அழிக்கும் மறவர் கூட்டம் ஒன்று திரள்வதால் தாங்க முடியாமல் நிலமே நெளிகிறது.
  • இப்படி வந்திருக்கின்றனர்.

அவள்

  • எல்லாரும் விரும்பும் கருமையான முகட்டுக்கண்ணுடன் நெருங்கி நிற்கும் முலை கொண்டவள்.
  • முலையில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
  • இருபுறமும் வரையப்பட்டுள்ளது.
  • அது பூவோட்டம் [கண்ணி] காட்டும் ஓவியம்.
  • அவள் முலைக்குப் பாதுகாப்பாக வரையப்பட்ட ஓவியம்.
  • பெண்யானை பெருமூச்சு விடுவது போல வண்ணம் தெளித்து வரையப்பட்ட ஓவியம்.(spray) 
  • இரும்புக் கம்பியால் வரையப்பட்ட ஓவியம்.
  • அவளும் ஆசை கொட்டும் பார்வை கொண்டவள். [மையல் நோக்கு]
  • அவள் தையல். அழகெல்லாம் தைத்து வைக்கப்பட்ட பெண்.

இரக்கம்

  • அவளை வரும்பியவர்கள் இரக்கம் கொள்ளத்தக்கவராக ஆகிவிட்டனர்.
  • காரணம் அவளது தந்தையும், அண்ணனும்.

இவள் அண்ணனும், தந்தையும்

  • மணம் செய்துகொள்ள வந்தவர் தரும்செல்வத்தை விரும்பவில்லை.
  • போரில் மோத விரும்புகின்றனர்.
  • “போரில் எங்களுக்கு நிகராக நிற்கமுடியாதவருக்குப் பெண் தரமாட்டேன்”என்று சொல்லிக்கொண்டு போரில்இறங்கியுள்ளனர்.
  • பலகை என்னும் கவசத்தை அவிழ்க்கக்கூடிய கழிபிணி முடிச்சுப் போட்டுக்கட்டிக்கொண்டுள்ளனர்.
  • வெட்டி வீழ்த்தக்கூடிய வாளைக் கையில்ஏந்திக்கொண்டுள்ளனர்.
  • குழுவாகத் திரண்டுள்ளனர். [குழாம்]
  • போரிட்டபோது குருதி படிந்த தலையைக்கழுவாமல் அடுத்த போருக்காகக்காத்திருப்பவர்கள்.
  • சிலரது கைகளில் கழுவாமல் கறை படிந்தகருநிற வேலும் இருக்கிறது.
  • இப்படிப்பட்ட மறவர்களாக இருக்கிறார்கள்.

இந்த ஊர் என்ன ஆகுமோ?



கழிப்பிணி முடிச்சு அவர்கள் தம் கவசத்தை இந்தக் கழிப்பிணி முடிச்சுப் போட்டுக் கட்டிக்கொண்டனர
கழிப்பிணி முடிச்சு அவர்கள் தம் கவசத்தை இந்தக் கழிப்பிணி முடிச்சுப் போட்டுக் கட்டிக்கொண்டனர்

காவல் கண்ணி ஓவு (ஓவியம்)
அவளுக்கு இரண்டிலும் 
வரையப்பட்டிருந்தது



                          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




தொல்காப்பியத்தில் கற்பியல்

 தொல்காப்பியத்தில் கற்பியல்:





   "கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் 
    மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
    விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
    பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்'       (1098)


விளக்கம்:- கற்பு எனும் மனத்திண்மை, தலைவன் மீது கொண்ட காதல், நல்லொழுக்கம், பொறுமை எனும் பெருங்குணம், நற்பண்புகளின் நிறை, விருந்தினரைப் பேணிக் காக்கும் தன்மை, சுற்றத்தாரை ஓம்பல் முதலானவை குடும்பத் தலைவியின் பண்புகளாகக் கூறுகின்றார் கற்பியலில் தொல்காப்பியர். 


"தற்புகழ்க் கிளவி கிழவன் முன் கிளத்தல் / எத்திறத் தானும் கிழத்திக்கு இல்லை' (1126)


விளக்கம்:- தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தாரை பற்றியும் வியந்து தலைவன் முன் புகழ்ந்து பேசும் எச்சூழலிலும் தலைவிக்கு இல்லாததொரு பண்பாக எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. 


"செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பா லான' (தொல்.1154) 


விளக்கம்:- அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையை உரைக்கும் சொல்வன்மை, நன்மை, தீமையைப் பிரித்தாராயும் அறிவு, அரும் பண்புகள் ஆகியவை பெண்டிரின் குணநலன்களாகத் தொல்காப்பியம் கூறுகின்றது.



                      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


அறவிலை வணிகன் ஆய் அலன்!

அறவிலை வணிகன் ஆய் அலன்!


புறநானூறு 134

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

பாடப்பட்டோன்: ஆய் வேளிர் ‘அண்டிரன்’

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு


“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;

பிறரும் சான்றோர் சென்ற நெறியென,

ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே.”


விளக்கம்:- 

இந்தப் பிறவியில் பிறருக்கு நலன் செய்தால், மேல் உலகில் அல்லது மறுபிறவியில் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்து நன்மை செய்யும் "வணிகன் அல்ல நான்". நன்மை செய்வதே எமது அறம். இதுவே, சான்றோர் கடைப்பிடித்த வழி. 


                           🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



அறநெறிச்சாரம்

அறநெறிச்சாரம் என்பது ஒரு தமிழ் நீதி நூல். அறத்தின் வழியைப் பிழிந்து சாரமாகத் தருவதால் இப்பெயர் ஏற்பட்டது. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் முனைப்பாடியார் என்னும் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது. இதில் 226 வெண்பாக்கள் உள்ளன. முனைப்பாடியார் தொண்டை மண்டல கெடிலம் ஆறு அருகில் உள்ள திருமுனைப்பாடியில் வாழ்ந்த புலவர் எனத் தெரிகிறது. 




பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா

அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்.” - 44 


விளக்கம்:-

சூரியனை கையில் இருக்கும் சிறிய குடை மறைக்கும். யாம் பல நூல்கள் கற்றோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளலாகாது. 

பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்களுக்கும் அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல் சில நூல்களைப் பயின்றாரிடத்து இருப்பதும் உண்டு


                      🙏🙏🙏🙏🙏🙏🙏


புனலாட்டுப் பத்து

ஐங்குறுநூறு

புனலாட்டுப் பத்து

பாடியவர்:- ஓரம்போகியார்


பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இவை நீராடுதலைக் குறிக்கும். மருத நிலத்தில் புனலாடல் மிகவும் முக்கியமானது


விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே

பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்

கரைசேர் மருதம் ஏறிப்

பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே” . . . .[074]


பொருளுரை:


கரையிலிருந்த மருதமரத்தில் ஏறி அவள் நீரில் பாய்ந்தாள். அது வானத்திலிருந்து மயில் இறங்குவது போல இருந்தது. அவள் அணிந்திருந்த அணிகலன்கள் மயில் தோகையையும், கோகைக்கண்களையும் போல விளங்கின


                      🙏🙏🙏🙏🙏🙏🙏

எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது!!!

“வான் குருவியின் கூடு வல் அரக்கு தொல் கரையான்

தேன் சிலம்பி யாவர்க்கும் செய் அரிதால்  - யாம் பெரிதும்

வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண் !

எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது !”

-



பொருளுரை:

வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப் படும் வலிமையான இயற்கைப் பசை,   தேன்அடை,  சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் புல்லிய  புலனங்களே  !  ஆனால்  இந்த  அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா? 


ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது; சாதாரண பறவையான வான் குருவி கட்டுகின்ற (தூக்கணாங் குருவிக்) கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக் குருவிகளைக் குடி வைக்க முடியுமா? முடியவே முடியாது !


அதாவது இந்த உலகத்தில் ஆற்றிவு படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும்  இருக்கவே  செய்கின்றன  என்பதை இடித்துக் காட்டி,  வாழ்வில் பிற மனிதர்களிடத்தும், பிற  உயிர்களிடத்தும் நாம் சமத்துவ   உணர்வு கொண்டிருக்க  வேண்டும்  என்பதை  எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம் !


‘யாம் பெரிய வல்லாளன்’ என்பதாய் எண்ணம் கொண்டு பிறரைத் தாழ்மையாக நினைத்து விடக் கூடாது’ என்ற எச்சரிக்கையை இப்பாடல் மூலம் நமக்கு அளிக்கிறார் ஔவையார் !

                 🙏🙏🙏🙏🙏🙏🙏


புறநானூறு - 112 - பாரி மகளிர் - கையறு நிலை

 புறநானூறு - 112




பாடியவர்பாரி மகளிர்

திணைபொதுவியல் 

துறைகையறு நிலை 


“அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,

எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர் கொளார்;

இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே”


விளக்கம்:-


இன்று முழுநிலாஇது போன்ற கடந்த முழுநிலா நாளன்று எங்களுடன் தந்தை இருந்தார்இன்று இல்லைஎம்முடைய குன்றமும் எங்களுடையதாக இருந்ததுஎம் குன்றத்தையும் வென்ற வேந்தர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.


பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும்பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர்தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.

நண்பரின் இழப்பை தாங்க முடியாத கபிலர் அந்த இரு பெண்களையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது


வென்றெறி முரசின் வேந்தர்என்பது மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை வெல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு

       

                          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏