திருவிந்தளூர் செப்பேடு:-
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள கிராமம் “திருவிந்தளூர்”. இதன் அருகில் உள்ள ‘கழுதண்ணி முட்டம்’ என்ற பகுதியில் கைலாசநாதர் கோவில் என்ற பெயரிலான சிவன்கோவில் உள்ளது. கட்டிட வேலைக்காக இக்கோவில் வளாகத்தில் நிலத்தைத் தோண்டும்போது ஒரு தொகுப்பாக செம்பு வளையத்தில் கோர்க்கப்பட்ட 86 செப்பேடுகள் கிடைத்தன. முதல் பக்கம் மட்டும் கிடைக்கவில்லை. செப்பேடுகள் சேர்க்கப் பட்ட வளையத்தில் உள்ள வட்டவடிவ முத்திரையில் சோழர்களின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதுடன் “இராஜேந்திரதேவன்” வழங்கிய கொடை என்ற எழுத்துப் பொறிப்பும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு செப்பேடும், சராசரி 44 செ.மீ. நீளமும் 21 செ.மீ அகலத்தையும் கொண்டுள்ளன. செப்பேடுகள், இணைப்பு வளையம், வளையத்தின் மீதான முத்திரை எல்லாம் சேர்த்து ஏறத்தாழ 150 கிலோ கிராம் எடையுள்ளது. இவ் வகையில் பெரிய அளவிலான செப்பேடுகளில் ஒன்றாக இது அமைகிறது.
இருபுறமும் எழுத்துப்பொறிப்புடைய இச்செப்பேடு 3710 வரிகளைக் கொண்டு இதுவரை, கிடைத்துள்ள செப்பேடுகளுள் அளவில் பெரியதாக அமைகிறது.
செப்பேட்டுச் செய்தி:-
👉 கி.பி.1053-56 ஆண்டுகளில் பழைய பிராமணக் குடியிருப்புகளில் இருந்து அழைத்துவரப்பட்ட ஏறத்தாழ “660 பிராமணர்களைக் குடியேற்றி புதிதாக உருவாக்கப்பட்ட பிரமதேயக் குடியிருப்பை” இச்செப்பேடு குறிப்பிடுகிறது.
👉 செப்பேட்டின் தொடக்கத்தில் வடமொழியில் எழுதப்பட்ட மெய்க்கீர்த்திப் பகுதி நீங்கலாக எஞ்சிய பகுதிகள் தமிழில் அமைந்துள்ளன.
👉 இப்புதிய பிரமதேயக் குடியிருப்பில் குடியேற்றப்பட்ட பிராமணர்கள் பெற்ற பொருளியல் நலன்களையும், பண்பாட்டு உரிமைகளையும் (மாடிவைத்து வீடுகட்டல், ஓடுவேய்தல் போன்றவை) நீர்மேலாண்மை உரிமையையும் இச்செப்பேடு குறிப்பிடுகிறது.
அவதானிப்புகள்:-
இச்செப்பேட்டை ஆய்வு செய்து பின்வரும் செய்திகளை எ. சுப்பராயலு அய்யா அவர்கள் வெளிப்படுத்தி உள்ளார்.
👉 அரசுக்கு வரியாக வரவேண்டிய 80,000 கலம் நெல் இங்குக் குடியேற்றப்பட்ட பிராமணர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
👉அத்துடன் நிலத்தின் உரிமையாளர்கள் என்ற முறையில் குடியானவர்களிடம் இருந்து குத்தகைப் பங்கையும் பெற்றுள்ளார்கள்.
👉 இப்பிரமதேயம் உருவாக்கப்படும் முன்னர் நில உரிமையாளர்களாய் இருந்தோரின் ‘நிலஉரிமை பறிக்கப்பட்டு’ அது பிரமதேயக் கிராமத்தில் குடியேற்றப்பட்ட பிராமணர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் பொருட்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா? என்பதில் தெளிவில்லை
Reference:-
No comments:
Post a Comment