புறநானூறு - 112
பாடியவர்: பாரி மகளிர்
திணை: பொதுவியல்
துறை: கையறு நிலை
“அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே”
விளக்கம்:-
இன்று முழுநிலா. இது போன்ற கடந்த முழுநிலா நாளன்று எங்களுடன் தந்தை இருந்தார். இன்று இல்லை. எம்முடைய குன்றமும் எங்களுடையதாக இருந்தது. எம் குன்றத்தையும் வென்ற வேந்தர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.
பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.
நண்பரின் இழப்பை தாங்க முடியாத கபிலர் அந்த இரு பெண்களையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது
‘வென்றெறி முரசின் வேந்தர்' என்பது மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை வெல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment