நெல்வேலி போர்
நெல்வேலிப் போர் நடப்பதற்கு முன்னர் நடந்த சில நிகழ்வுகளும் அதில் ஈடுபட்ட மன்னர்களையும் அவர்களின் வரலாற்றையும் சற்று பார்த்துவிட்டு நெல்வேலிப் போரை பற்றி இங்கே உரையாடுவோம்.
618 AD - புள்ளலூர் போர்.
புள்ளலூர் என்ற கிராமம் காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்த கிராமத்தில் மொத்தம் மூன்று போர்கள் நடந்துள்ளன. முதலாவது மகேந்திரவர்மனுக்கும் இரண்டாம் புலிகேசிக்கும் நடந்த போர். இந்தப் போர் 618 AD ஆம் ஆண்டு நடைபெற்றது. மகேந்திரவர்மனின் தந்தையான சிம்ம விஷ்ணு வடக்கே கிருஷ்ணா நதி கரையில் தொடங்கி தெற்கே புதுக்கோட்டை வரை ஒரு மிகப்பெரிய பல்லவ சாம்பிராஜியத்தை உருவாக்கி ஆண்டு வந்தார். சிம்ம விஷ்ணு ராஜியத்தில் ஆந்திர நாடு, தொண்டை நாடு, சோழ நாடு ஆகிய மூன்று நாடுகளும் இருந்தன. பின் ஆட்சிக்கு வந்த மகேந்திரவர்மன் போர்களை விட கலைகளிலும், கோவில் கட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி, பல்லவ ராஜ்ஜியத்தின் மீது போர் தொடுத்தான். இந்தப் போரில் மகேந்திரவர்மன் கிருஷ்ணா நதிக்கரைவை இருந்த ஆந்திர பிரதேசத்தை சாளுக்கிய மன்னனிடம் இழந்தான். சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி, தனது தம்பியான விஷ்ணுவர்தனை இந்த ஆந்திர பிரதேசத்திற்கு ஆட்சி செய்யுமாறு நியமிக்கப்பட்டான். இவனது வம்சமே பிற்காலத்தில் வேங்கியை தலைநகராக கொண்ட கீழே சாளுக்கியர்கள் என்று கூறப்பட்டனர். இரண்டாம் புலிகேசி அதாவது மேலை சாளுக்கியராக ஆட்சி புரிந்து வந்தான்.
642 AD:- வாதாபி போர்
மகேந்திரவர்மன் தான் இழந்த பல்லவ தேசத்தை மீட்க எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. ஆனால் அவனுக்கு பின் ஆட்சிக்கு வந்த அவனது மகனான நரசிம்மவர்மன் "பரஞ்சோதி" என்பவர் தலைமையில் இரண்டாம் புலிகேசியின் தலைநகரான வாதாபியின் மீது போர் தொடுத்தார். இந்த போரில் சாளுக்கிய மன்னனின் தேசத்தையும் வாதாபியையும் முற்றிலுமாக நிர்மூலம் ஆக்கியனார்.
வாதாபியை வென்ற பின்பு “வாதாபி கொண்டான்” என்ற பட்டத்தை இம்மன்னர் சூட்டிக்கொண்டார். வாதாபி நகரின் மையத்தில் வெற்றித் தூண் நாட்டிய நரசிம்மவர்மன் தன்னை உபேந்திரனுடன் (விஷ்ணுவுடன்) ஒப்பிட்டுக்கொண்டார் என்று வேலுர்ப்பாளையம் செப்பேடு பதிவு செய்துள்ளது. வாதாபிப் போரில் இரண்டாம் புலிகேசி மடிந்தானா அல்லது உயிர் பிழைத்திருந்தானா என்பதற்குத் தெளிவான ஆதாரம் இல்லை. வாதாபிப் போருக்குப் பின்னர் இம்மன்னனின் கல்வெட்டு எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இம்மன்னன் இப்போரில் மடிந்தான் என்று கொள்ளலாம். புலிகேசியின் இறுதி ஆண்டு கி.பி. 642 என்றும் கருதலாம்.
655 AD:- முதலாம் விக்கிரமாதித்தன்
இரண்டாம் புலிகேசிக்கு பின் ஆட்சிக்கு வந்த அவனது மகன், மருமகள் என பல குழப்பங்கள் அந்த ஆட்சியில் நடைபெற்றது. புலகேசினின் ஐந்து மகன்களும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர். இப்பொழுது இரண்டாம் புலிகேசியின் மகனான "முதலாம் விக்கிரமாதித்தன்" என்பவன் அவனுக்கு முன் இருந்த மன்னர்களை கொன்று சாளுக்கிய தேசத்திற்கு மன்னனாக ஆட்சி கட்டிலில் ஏறினான். வெற்றிக்கு வந்த முதலாம் விக்கிரமாதித்தன் முதல் குறிக்கோளே பல்லவ தேசத்தை பழி தீர்க்க வேண்டும் என்பதுதான். அப்பொழுது நரசிம்மவர்மனின் ஆட்சி பல்லவ தேசத்தில் இருந்ததால் கொக்கை போல நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தான் முதலாம் விக்ரமாதித்தன்.
670 AD:- இரண்டாம் மகேந்திரவர்மன் மற்றும் பரமேஸ்வர வர்மனின் ஆட்சி
நரசிம்மவர்மன் இறந்த பிறகு "இரண்டாம் மகேந்திரவர்மன்" ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் மாண்டு போனான். இரண்டாம் மகேந்திரவர்மனுக்கு பிறகு அவனது மகனான மகேஸ்வரவர்மன் ஆட்சிக்கட்டில் ஏறினான். மகேஸ்வரவர்மனும் போர் தந்திரங்களில் கவனம் செலுத்தாமல் பழைய கோவில் திருப்பணி செய்வது, கோவிலை புதிதாக கட்டுவது, பிராமணர்களுக்கு தானம் கொடுப்பது என்று இதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தான். இவன் கூரம் என்னும் கிராமத்தில் கட்டிய கற்றளிதான் தமிழகத்தில் முதலில் கல்லால் செய்யப்பட்ட கற்கோவில் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பழி தீர்க்க கொக்கை போல் சமயம் பார்த்துக் கொண்டிருந்த முதலாம் விக்ரமாதித்தனுக்கு அளவெடுத்து செய்தது போல் வந்து சேர்ந்தான் ‘பரமேஸ்வரன்’ என்னும் பல்லவ மன்னன்.
673 AD:- விக்ரமாதித்தன் காஞ்சி படையெடுப்பு
விக்ரமாதித்தன் தன் பெரும் படைகளை காஞ்சியை நோக்கி முன்னேறச் செய்தான். விக்ரமாதித்தன் காஞ்சியை நோக்கி வருவதை கேள்விப்பட்ட பரமேஸ்வரன் காஞ்சியை விட்டு வெளியேறினான். தன்னை எதிர்க்க யாரும் இன்றி காஞ்சியை எளிதில் கைப்பற்றினான் விக்ரமாதித்தன்.
கத்வல் செப்பேடுகள்:- காஞ்சியை வெற்றி பெற்ற சாளுக்கிய மன்னனான முதலாம் விக்கிரமாதித்தன் கத்வல் செப்பேட்டில் பின்வருமாறு இந்த போரை பற்றி கூறுகிறான்..
“ஶ்ரீவல்லப விக்கிரமாதித்தன், நரசிம்மவர்மனின் புகழை அழித்தான், மகேந்திரனின் வலிமையை முறித்தான், ஈஸ்வரனை (பரமேஸ்வர வர்மனை) தன் அரசியல் அறிவால் வீழ்த்தினான், தென்னகத்தின் பேரழகியான காஞ்சிபுரம் என்னும் கன்னியின் ஒட்டியாணத்தை இறுகப் பிடித்து அவளைக் கைக்கொண்டான். ‘ரணரஸிகனான’ (போர்களில் விருப்பமுள்ள) அவன் தன்னுடைய வலுவான தோள்களால் பல்லவர்களை வென்றான், மாமல்லனின் குடும்பத்தைத் தோற்கடித்த அவனுக்கு ‘ராஜமல்லன்’ என்ற பெயர் பொருத்தமானதன்றோ. ஈஸ்வர-போதிராஜனை (பரமேஸ்வரவர்மனை) தோற்கடித்து பெரும் கோட்டைச் சுவர்களை உடையதும் உடைக்கக் கடினமானதும் ஆழமான அகழிகளை உடையதுமான தென்னகத்தின் ஒட்டியாணமான காஞ்சி நகரைக் கைப்பற்றினான்’ என்று இந்த வெற்றியைப் பற்றி அவனுடைய கத்வல் செப்பேடுகள் புகழாரம் சூட்டுகின்றன.”
நரசிம்மனைத் தனியாகக் குறிப்பதிலிருந்தும் மாமல்லனின் குடும்பத்தைத் தோற்கடித்தேன் என்று குறிப்பாக இந்தச் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டிருப்பதிலிருந்தும் நரசிம்மவர்மன் மீதும் பல்லவர்கள் மீதும் அவனுக்கு இருந்த ஆத்திரத்தின் தன்மையை அறிந்துகொள்ளலாம்.
ஆயினும், காஞ்சிபுரத்திற்கோ அருகில் உள்ள மாமல்லபுரத்தின் கலைச்செல்வங்களுக்கோ எந்தக் கெடுதலும் சாளுக்கியர்களால் நேரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
*********** 674 AD:- நெல்வேலி போர் ************
- "நெல்வேலி போர் வென்ற நின்று சீர் நெடுமாறன்"
காஞ்சியை எளிதில் வென்ற மமதையில் முதலாம் விக்கிரமாதித்தன் தெற்கு நோக்கி தன் படைகளை நகர்த்தினான்.
அவன் சோழ நாட்டை எளிதில் கைப்பற்றிக் கொண்டான். விக்கிரமாதித்தன் உறையூரில் தங்கிய பிறகு அங்கிருந்து பாண்டிய நாட்டின் மீது படை எடுக்க சென்றான்.
அவனை புதுக்கோட்டை அருகில் உள்ள நெல்வேலி என்னும் ஊரில் பாண்டிய மன்னன் நெடுமாறன் தடுத்து நிறுத்தினார். முதலாம் விக்ரமாதித்தனுக்கும் பாண்டிய மன்னன் நெடுமாறனுக்கும் மிகப்பெரிய போர் நிகழ்ந்தது. நெடுமாறனும், அரவது மகன் கோ-சடையன் என்பவரும் இப்போரில் பங்கு பெற்றனர்.
போர் மிகவும் உக்கிரமாக நிகழ்ந்தது.
இந்தப் போரைப் பற்றி சேக்கிழார் பெரிய புராணத்தில் ஐந்து பாடல்களில் குறிப்பிடுகிறார்.
"ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்தேற்ற
சேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப்
பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம்
காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார்."
(பெரிய புராணம் – நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்)
'போரினை வேண்டி வந்தவர்கள்’ என்று குறிப்பாகச் சொல்வதால், இந்தப் போர் நெடுமாற பாண்டியன் விரும்பியதல்ல, எதிரிகள் போரை வேண்டி வந்ததால் தற்காப்புக்காகவே பாண்டியர்கள் போரிட நேர்ந்தது என்பதே இதன் மூலம் அவர் உணர்த்துவது.
**********“போரின் கொடூர காட்சிகள்”*************
இருபக்கப் படைகளிலும் போரிட்ட வீரர்கள் வீழ்த்திய யானைகளின் உடல் துண்டுகளும் குதிரைகளின் அறுபட்ட உடல்களும் போர்க்களம் முழுவதும் நிரம்பிக் கிடந்தன. அவற்றோடு போர்வீரர்களின் தலைகள் மலைகளாகக் குவிந்து கிடந்தன. ரத்த ஆறு கடல்போல ஓடியது. முன்பு கடலைத் தடுக்க உக்கிரபாண்டியர் வேல் எறிந்தது போல இப்போதும் எறிய வேண்டுமோ என்று எண்ணுமாறு இருந்தது அந்தக் குருதிக் கடல்.
வெற்றிபெற்ற குதிரைகள் களிப்பால் கனைத்தன. மலைபோன்ற யானைகள் பிளிறின. வீரர்கள் கோஷமிட்ட ஒலிகளும் இவற்றோடு சேர்ந்து கொண்டு ஊழிக்காலத்தில் மேகங்கள் முழக்கமிடுவது போல ஒலித்து அச்சத்தை ஏற்படுத்தியது. அத்தோடு வீரர்களின் படைக்கலங்கள் எறியப்படும் ஓசையும், மோதும் ஓசையும் சேர்ந்துகொண்டது. தீப்பொறி பறக்க வாள்களும் வேல்களும் மோதிக்கொண்டன. அவற்றால் வெட்டுண்ட உடல்கள் போர்க்களத்தில் வீழ்ந்துகிடந்தன. பூதங்களும் பேய்களும் அவற்றை உண்டு கூத்தாடின என்றெல்லாம் இந்தக் கோரமான போரின் காட்சிகளை விவரிக்கிறார் சேக்கிழார். அப்படிப் பட்ட கொடிய போரில்
“பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குஉடைந்து
முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப்
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து.”
பனை போன்ற துதிக்கைகளை உடைய மதயானைகளைக் கொண்ட பாண்டியரின் படைகளை எதிர்க்க இயலாமல் வடபுலத்திலிருந்து வந்த சாளுக்கியப் படைகளின் படை சிதறி ஓடியது என்றும் போரில் வெற்றி பெற்றதால் நெடுமாறன் பாண்டியருக்கு உரிய வேப்ப மாலையோடு வெற்றிக்கு உரிய வாகைப் பூவையும் சூடிக்கொண்டான் என்றும் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
ரணரசிகன் - ரணதீரன்:-
கோ-சடையன் இந்தப் போரில் ரணரசிகன் என்று தன்னை அழைத்துக்கொண்ட விக்கிரமாதித்தனைத் தோற்கடித்ததால் ரணதீரன் என்ற பெயரைப் பெற்றான்.
நெல்வேலியில் போரிட்டு, தோல்வியடைந்து மீண்டும் உறையூர் திரும்பி, அதன் பின் சாளுக்கிய நாடு திரும்புவதற்கான ஆயத்தங்களைச் செய்தான் விக்கிரமாதித்தன்.
பெருவளநல்லூர் போர்:-
இந்தக் காலகட்டத்தில் காஞ்சியிலிருந்து வெளியேறிய பல்லவன் பரமேஸ்வரவர்மன், ஆந்திர நாடு சென்றிருந்தான். அங்கு ஒரு படையை திரட்டி சாளுக்கிய மன்னன் எதிர்கொள்ள துணிந்தான். பாண்டியனிடம் தோல்வியுற்று திரும்பிய சாளுக்கிய படைகளை பெருவளநல்லூர் என்னும் ஊரில் பல்லவ மன்னன் எதிர்த்தான். பெருவளநல்லூர் என்னும் ஊர் திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம்.
அங்கே நடைபெற்ற போர் வர்ணனைதான் பல்லவர்களின் கூரம் செப்பேட்டில் இப்படிப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட வரிகளில் இந்தப் போர் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
கூரம் செப்பேடு:-
ஏழு லட்சம் படைவீரர்களோடு போர் புரிந்த விக்கிரமாதித்தன் படுதோல்வியடைந்து தனி ஆளாக கந்தையைப் போர்த்துக்கொண்டு ஓடி ஒளிந்தான் என்று கூரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
பரமேஸ்வரவர்மனின் மகனும் இரண்டாம் நரசிம்மன் என்ற பெயரில் பட்டமேற்றவனுமான ராஜசிம்ம பல்லவன் இந்தப் போரில் தந்தையோடு பங்கேற்றான். அதனால் தன்னை ரணஜெயன் என்று அழைத்துக்கொண்டான். நெல்வேலியிருந்து தோற்றோடிய விக்கிரமாதித்தனைத் தொடர்ந்து வந்த பாண்டியப் படைகளும் இந்தப் போரில் பங்கேற்றிருக்கவேண்டும். விக்கிரமாதித்தனுடைய மகனான விநயாதித்தனுடைய கேந்தூர் செப்பெடு ‘தமிழக அரசர்கள் அனைவரும் ஒன்று கூடி விக்கிரமாதித்தனை எதிர்த்தனர்’ என்று குறிப்பிடுகிறது.
கூரம் செப்பேடு கூறும் போரைப் பற்றிய தகவல்:-
“கணக்கற்ற வீரரும் கரிகளும் பரிகளும் நடந்து சென்றமையாற் கிளம்பிய துளி கதிரவனை மறைப்பக் கதிரவன் ஒளி சந்திரன் கோட்டைபோல் மங்கியது. முரசொலி இடியோசைபோல அச்சமூட்டியது. உறையில் இருந்து வெளிப்பட்ட வாட்கள் மின்னல்போலக் கண்களைப் பறித்தன. கரிகள் கார்மேகங்கள்போல அசைந்தமை கார்காலத் தோற்றத்தைக் காட்டியது. போரில் உயர்ந்த குதிரைகள் நின்றிருந்த காட்சி கடல் அலைகள் போலத் தோன்றியது. அவற்றின் இடையில் கரிகள் செய்த குழப்பம் கடலில் அச்சுறுத்தும் பெரிய உயிர்கள் வரும்போது உண்டாகும் சுழலை ஒத்திருந்தது. கடலிலிருந்து சங்குகள் புறப்பட்டாற் போலச் சேனைக் கடலில் இருந்து வீரர் சங்கொலி எங்கும் பரப்பினர். கத்தி, கேடயம் முதலியன பறந்தன. பகைவர் போரிட்டு வீழ்ந்து கிடந்த நிலைமை, காண்டா மிருகத்தால் முறிக்கப்பட்ட செடிகளும் மரங்களும் வீழ்ந்து கிடக்கும் நிலையை ஒத்திருந்தது. போர் வீரர்கள் நாகம், புன்னாகம் முதலிய மரங்கள் நிறைந்த காடுகளை ஒப்ப அணியணியாக நின்றனர். வீரர் வில்லை வளைத்து அம்பை விடுத்தபோது உண்டான ஓசை, காட்டில் காற்றுத் தடைப்பட்ட காலத்தில் உண்டாகும் பேரோசையை ஒத்திருந்தது. கரிகள் ஒன்றோடொன்று பொருதபொழுது தந்தங்கள் குத்திக்கொண்டு எடுபடாது நின்றன. குதிரை வீரர், வாட்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு எடுக்க முடியாமல் நின்றனர். சிலர் மயிர் பிடித்து இழுத்துச் சண்டையிட்டனர். ‘கதைகள்’ ஒன்றோடு ஒன்று மோதின. செந்நீரும் கரிகளின் மதநீரும் நிலத்தில் தோய்ந்து பரந்த காட்சி, தரையில் மஞ்சள் பூசினாற்போல ஆயிற்று. வீரர்களுடைய, கரி-பரிகளுடையதலைகளும் கைகளும் கால்களும் தொடைகளும் பிறவும் வெட்டுண்டு சிதறுண்டன. இருதிறத்தாரும் முன்னும்பின்னும் அலைந்து, ஒடிச்சண்டையிட்டனர். யாறாக ஓடின் இரத்தத்தின் மேல் பாலமாக அமைந்த யானை உடலங்கள் மீது வாள்வீரர் நின்று போரிட்டனர். அப்பொழுது நெற்றி அணங்கு வெற்றி என்னும் ஊஞ்சலில் இருந்து ஆடினாள். இறந்த வீரர் கைகளில் வாள்முதலியன அப்படியே இருந்தன. அவர்கள் போரிட்ட நிலையிலேயே இறந்து கிடந்தனர். அவர் கண்கள் சிவந்திருந்தன. பெருவீரர் அணிந்திருந்த அணிகள் யாவும் பொடியாகிக் கிடந்தன. பேய்கள் முதலியன செந்நீர் குடித்துமதி மயங்கின. முரசுக்கேற்ற தாளம்போலத்தலை அற்ற முண்டங்கள் கூத்தாடின. பல நூறாயிர வீரருடன் வந்த விக்கிரமாதித்தன், தனியனாய்க் கந்தையைப் போர்த்துக் கொண்டு ஓடி ஒளிந்தான். இப்போரில் சண்டையிட்ட பரமேசுவரவர்மனது போர்ப்பரியின் பெயர் அரிவாரணம்; குதிரையின் பெயர் அதிசயம்.’
சாளுக்கியரும் பல்லவர்களும் வெற்றி என்று பொறுத்துக் கொண்டு செப்பேடு செய்திகள்:-
விக்கிரமாதித்தன் தோல்வியூற்ற இடம் நெல்வேலி மற்றும் பெருவளநல்லூர் ஆகும்.
எப்பொழுதும் தான் தோற்ற செய்தியை எந்த அரசனும் தன் பட்டயத்தில் கூறமாட்டான் அல்லவா?
ஆதலின், விக்கிரமாதித்ததின் கத்வல் செப்பேடு, காஞ்சியை வென்றதாக இருக்கிறது. ஆனால் நெல்வேலி மற்றும் பெருவளநல்லூர் தோல்வி செய்திகள் எதுவும் இல்லை.
அதைபோல, காஞ்சியை இழந்ததாகப் பல்லவர் பட்டயங்கள் கூறவில்லை. கூரம் செப்பேடு தகவலும் சாளுக்கியினை புறமுதுகிட்டு ஓட செய்ததாக மட்டுமே கூறுகிறது.
பெருவளநல்லூரில் தோற்றதாகச் சாளுக்கியர் பட்டயங்கள் கூறவில்லை.
இங்ஙனம் காணின், முதலில் வெற்றி கொண்ட சாளுக்கியன் முடிவில் இழிவான தோல்விபெற வேண்டியவன் ஆயினான் என்பது பெறப்படும்.
எப்பொழுதும் செப்பேடுகளும்; பிற வரலாறும் எழுதுபவனின் எண்ணத்தை சார்ந்ததே..
வெற்றி-தோல்வி விளையாட்டில்; என்னற்ற உயிர்கள் பலியானதுதான்; மன்னர்களின் வரலாறு.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏