அறவிலை வணிகன் ஆய் அலன்!

அறவிலை வணிகன் ஆய் அலன்!


புறநானூறு 134

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

பாடப்பட்டோன்: ஆய் வேளிர் ‘அண்டிரன்’

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு


“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;

பிறரும் சான்றோர் சென்ற நெறியென,

ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே.”


விளக்கம்:- 

இந்தப் பிறவியில் பிறருக்கு நலன் செய்தால், மேல் உலகில் அல்லது மறுபிறவியில் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்து நன்மை செய்யும் "வணிகன் அல்ல நான்". நன்மை செய்வதே எமது அறம். இதுவே, சான்றோர் கடைப்பிடித்த வழி. 


                           🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்

புத்தகம்: “கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்
நக்கிரன்


ஒரு பொருளை தயாரிப்பதற்கு செலவாகும் நீரை ஆசிரியர் இந்நூலில் “மறைநீர்” என்று கூறுகிறார். மறைந்துள்ள நீர்-மறைநீர் (Virtual Water). ஒரு உற்பத்தி செய்ய செலவாகும் நீரை Water Foot Print என்று இணையதளத்தில் பார்த்தால் கிடைக்கும். (https://www.waterfootprint.org/water-footprint-2/what-is-a-water-footprint/). உதாரணமாக, 7 கிராம் காபி தூளுக்கு மொத்தம் 140 லிட்டர் மறைநீர் செலவாகும் (end to end).


மறைநீரை பற்றி பேசினாலே அது தொழில் வளர்ச்சிக்கு எதிராக பார்க்கப்படுகிறது. மிகையாக நீர் உட்கொள்ளும் தொழில்கள் பன்னாட்டு நிறுவனங்களால் திட்டமிட்டு மூன்றாம் உலக நாடுகளுக்கு தள்ளப்படுகிறது. இதில் நாமும் சிக்கிக் கொண்டோம். மக்களுக்கு பாதுகாக்கப்பட்டு குடிநீரை வழங்க வேண்டியது அரசின் "கடமை". நன்னீர் நமது "உரிமை". ஆனால் அரசே "புட்டிநீர்” விற்பனை செய்வதால் நாம் அதை விலைக்கு வாங்கி கொடுத்து வருகிறோம். 


லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட 'சிவப்பு பொருளாதாரத்தில்' இருந்து 'பசுமை பொருளாதாரத்திற்கு' தமிழகம் மாறாவிட்டால்; மேலும் நீர் பற்றாக்குறையை நோக்கி தள்ளப்படும்.


வருங்கால தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதை போலவே அவர்களுக்கான நன்னீரை பாதுகாத்து சேமித்து வைப்பதும் நம் முன் நிற்கும் பெரும் கடமையாகும்.


                    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




அறநெறிச்சாரம்

அறநெறிச்சாரம் என்பது ஒரு தமிழ் நீதி நூல். அறத்தின் வழியைப் பிழிந்து சாரமாகத் தருவதால் இப்பெயர் ஏற்பட்டது. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் முனைப்பாடியார் என்னும் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது. இதில் 226 வெண்பாக்கள் உள்ளன. முனைப்பாடியார் தொண்டை மண்டல கெடிலம் ஆறு அருகில் உள்ள திருமுனைப்பாடியில் வாழ்ந்த புலவர் எனத் தெரிகிறது. 




பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா

அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்.” - 44 


விளக்கம்:-

சூரியனை கையில் இருக்கும் சிறிய குடை மறைக்கும். யாம் பல நூல்கள் கற்றோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளலாகாது. 

பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்களுக்கும் அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல் சில நூல்களைப் பயின்றாரிடத்து இருப்பதும் உண்டு


                      🙏🙏🙏🙏🙏🙏🙏