திரிகடுகம்
- சுக்கு
- மிளகு
- திப்பிலி
என்னும் மூன்று மருந்துகளையும் தனித்தனியே பொடி செய்து, இப்பொடிகளைச் சம அளவாகச் சேர்த்து, அமைக்கப்பட்ட மருந்து “திரிகடுகம்” என்பது.
இந்த திரிகடுகத்தை சூரணம் என்றும் கூறுவர். இது காரமாக இருக்கும். இதனால் திரிகடுகம் (மூன்று காரமான- பொருள்) என்று பெயர் பெற்றது. இதை நாள்தோறும் காலையில் சிறு அளவாக உட்கொண்டால் உடல் நோயை நீக்கி நலம் உண்டாக்கும். திரிகடுகமாகிய சுக்கு, மிளகு, திப்பிலியைச் சமனளவாகச் சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சிய கியாழத்தையும் உட்கொள்ளலாம். திரிகடுகம் கியாழமும், சூரணமும் உடல் நோயைப் போக்குவதுபோல, திரிகடுகம் என்னும் இந்நூலைப் படித்தாவரின் உள்ள நோய் (மனநோய்) நீங்கும் என்னும் கருத்தினால், இந்நூல் திரிகடுகம் என்று பெயர் பெற்றது.
ஒவ்வொரு செய்யுளிலும் மும்மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன. உதாரணத்திற்காக திரிகடுகத்தின் இரு பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
6-ஆவது பாடல்
“பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக்
காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்க”
விளக்கம்:- பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மை.
49-ஆவது பாடல்
கணவன், மனைவி, மக்கள் அடங்கியது குடும்பம். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார் பாரதிதாசன். குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று திரிகடுகம் சொல்கிறது. ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது ஆன்றோர் வாக்கு. பெற்றோர் ஏவாமல் தாமாகச் செய்யும் இயல்பு மக்களுக்கு வேண்டும். அவர்கள் என்றும் கெடாத நல்ல மருந்தைப் போன்றவர்கள். ஏவியும் கேளாத மக்கள் பயனற்றவர். இல்லறத்தில் தனக்குரிய அறம் மறந்து மனைவியைப் போற்றாத கணவன் பயனற்றவன். செல்வத்தைப் பெருக்குபவளாக மனைவி இருக்க வேண்டும். வீட்டின் செல்வத்தைத் தேய்க்கின்ற மனைவி பயனற்றவள் என்று குறிப்பிடுகிறார் நல்லாதனார்
ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக் குறுதியில் லார
விளக்கம்:- தனி மனித நலம் - குடும்ப நலமாய் - சமுதாய நலமாய் விரிகிறது. எனவே, நல்ல சமுதாயம் உருவாக அடிப்படையாய் அமைவது நல்ல குடும்பங்களே. அவை நலம் உடையதாய் இருக்க வேண்டும் என்ற கருத்தைக்சொல்லி விளக்கும் பாடல்.
சிறுபஞ்சமூலம்:
சிறுபஞ்சமூலம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் ஆசிரியர் காரியாசான். இந்நூல் நூற்றிரண்டு செய்யுட்களையும் இரண்டு சிறப்புப் பாயிரச் செய்யுட்களையும் உடையது. பஞ்சமூலம் என்பது ஐந்துவகையான வேர்கள். அவை
- கண்டங்கத்திரி வேர்
- சிறுவழுதுனை வேர்
- சிறுமல்லி வேர்
- பெருமல்லி வேர்
- நெருஞ்சி வேர்
என்பவை.
இந்த ஐந்து வேர்களைக் கொண்டு சிறுபஞ்சமூலம் என்னும் மருந்து செய்யப்படு நோயாளிகளுக்கு தரப்பட்டது.
இந்த சிறு பஞ்சமூலம் என்னும் நூலில் ஒவ்வொரு செய்யுளிலும் ஐந்து பொருள்கள் கூறப்படுகின்றன. இவை உடல் நோயைத் தீர்க்கிற சிறு பஞ்சமூலம் போன்று மனநோயைத் தீர்ப்பன.
ஆகையால் சிறுபஞ்சமூலம் என்று பெயர் பெற்றது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏