புத்தகம்:- வரலாற்றில் சீயமங்கலம்
வெளியீடு:- திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
எழுத்தாக்கம்:-ச. பாலமுருகன்
சீயமங்கலம் குடைவரைக் கோவில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் (590-630 AD) அமைத்த குடைவரைகளில் ஒன்று. (சீயம் என்றால் சிங்கத்தைக் குறிக்கும்) மகேந்திரவர்மன் தான் அமைத்த இந்த குடைவரைக்கு ‘அவனிபாஜனபல்லவவேசுவரம்’ என்று பெயரிட்டார். பிறகு சோழகாலத்தில் ‘தூணாண்டார் கோவில்’ என்று பெயர் பெற்றது. தற்காலம் வரை அவ்வாறே அழைக்கப்படுகிறது. கோவிலை ஒட்டியுள்ள ஏரியின் நடுவில் தூண்போன்ற ‘குத்துக்கல்’(Menhir) அமைப்பு உள்ளது. இதுவே இவ்வூரின் இறைவனது பெயராக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
சீயமங்கலம் சிறப்புகள்:-
👉 வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். பல கல்வட்டங்களும், கல்பதுக்கைகள், குத்துக்கல், பாறை கீறல்கள், பாறை ஓவியங்கள், தமிழி கல்வெட்டுகள், பானை ஓடுகள் ஆகியவை இப்பகுதியில் அருகில் கிடைக்கிறது.
👉 சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் ‘நல்லியக்கோடன்’ இப்பகுதியை ஆட்சி செய்திருக்கிறார். நல்லியக்கோடன் கடையெழு வள்ளல்களுக்குப் பின்னர் வாழ்ந்த வள்ளல்களில் ஒருவன். ‘ஓய்மான் நாட்டு’ அரசன். இந்நாடே ‘அருவாநாடு’, ‘அருவாவடதலை’ நாடு ஆகியவற்றை அடக்கியிருந்ததாக கருதுகின்றனர்
👉 தமிழகத்தில் முதல் ‘ஆடலரசன்’(நடராஜன்) சிற்பம் அமைந்த இடம்.
👉 இக்கோவிலின் திருச்சுற்று மண்டபத்தை ‘திருநிலை அழகி’ என்னும் தேவரடியாரால் கட்டப்பட்டது என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.
👉 கோவிலிலிருந்து சற்று தொலைவில் சமணக் குன்று உள்ளது. 24ஆம் தீர்த்தங்கரரான மகாவீரர் (599-522 BC), 23ஆம் தீர்த்தங்கரரான பார்சுவநாதர் (872_772BC) பாகுபலி புடைப்பு சிற்பங்கள் உள்ளன. தீர்த்தங்கர்களை தமிழில் 'அருகன்' என்பர். சமணர் குன்றில் இருக்கும் கல்வெட்டு கங்கமன்னன் இரண்டாம் ராஜமல்லனை குறிக்கிறது. (815 AD)
👉 இங்குள்ள பார்சுவநாதரின் புடைப்பு சிற்பம் விளக்கும் செய்தியாதெனில், ஒரு புறம் நல்வினையும் மறுபுறம் தீவினையும் நிகழ்கின்றன ஆனால் அவரோ அதை கடந்தவராக நடுவில் நிலை கொண்டுள்ளார்.
👉 சீயமங்கலம் கோவில் மற்றும் சமணக் குன்றில் மொத்தம் 35 கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கல்வெட்டில், மகேந்திரவர்மன் மற்றும் சமணக்குன்று கல்வெட்டுக்கள் கிரந்தத்தில் உள்ளது. ஏனைய கல்வெட்டுக்கள் தமிழில் உள்ளது. இக்கல்வெட்டுக்கள் 7ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டுவரை இப்பகுதியை ஆண்ட அரசர்களை குறிக்கிறது.
👉 சமணக் குன்றில் இருக்கும் கல்வெட்டு ‘திராவிட சங்கம் மற்றும் நந்தி சங்கத்தை’ பற்றி தவல்களைக் குறிக்கிறது.
👉 வரலாற்றுக் காலம் தொட்டே கல்வெட்டுகளில் இவ்வூர்ப் பெயர் சீயமங்களம் என்றே வருகிறது
👉 சோழன் குலோத்துங்கன் கல்வெட்டு (1136AD):- கல்வெட்டு இருக்குமிடம்: கோவிலின் கிழக்கு சுவர். கல்வெட்டு வாசகம்: சம்புபுரம் ஊரில் வாழ்ந்த பள்ளி இனத்தைச் சார்ந்த செல்வன் என்பவன் வேட்டைக்குச் சென்ற போது விட்டஅம்பு தவறுதலாகப் பட்டு சீயமங்கலம் ஊரைச் சார்ந்த அதே இனத்தைச் சார்ந்த வேணாட்டரையன் என்பான் இறந்துவிட்டான். நாட்டார் மற்றும் சம்புவராயர் உட்பட ஊர் சபையினர் கூடி இந்நிகழ்வு தவறுதலாக நடந்துவிட்டதால் அதற்காக செல்வன் என்பவன் இறக்க வேண்டாம் என்று தீர்மானித்து தண்டனையாக தூணாண்டார் கோவிலில் ‘அரை விளக்கு’ வைப்பதற்கு 16 பசுக்கள் கொடுக்க ஆணையிட்டுள்ளனர்.
👉 சோழன் குலோத்துங்கன் கல்வெட்டு (1198AD):- கல்வெட்டு இருக்குமிடம்: கோவிலின் தெற்கு சுவர். கல்வெட்டு வாசகம்: பேராவூர் ஊரைச் சார்ந்த நட்டுவன் வாசல்விண்கரையன் எழுவன் என்பவன் வேட்டைக்குப் போன இடத்தில் இவன் விட்ட அம்பு காடன் என்பவனின் மகன் வீரன் மீது பட்டு இறந்துவிட்டான். நாட்டார் சபை கூடித் தவறுதலாக நடந்து விட்டதால் தண்டனையாக எழுவன் தூணாண்டார் கோவில் ‘அரை விளக்கு’ எரிக்கத் தேவையான செலவிற்கு இக்கோவில் பிராமணனிடம் 15 பணம் கொடுக்க உத்தரவிட்டுள்ளனர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment