சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்ற மன்னனோடு போரிட்டு அவரால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் அடைப்பட்டிருக்கையில் மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை தன் தாகத்திற்கு தண்ணீர் கொடுக்குமாறு காவலாளிகளிடம் கேட்கும்பொழுது காவலாளிகள் அம்மன்னன் மனம் புண்படும்படி இழிவுபடுத்தி ஒரு மன்னன் என்று கூட பாராமல் மரியாதையின்றி நடந்து கொண்டார்கள். தாகத்துக்கு தண்ணீர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் மன்னன் மிகவும் மனம் வருந்தி, தந்த நீரைக்குடியாது வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஒரு செய்யுளை எழுதி விட்டு உயிர் நீத்தான்.
சேரமான் கணைக்கால் இரும்பொறை மனம் நொந்தி எழுதிய செய்யுள் புறநானூற்றின் 74வது பாடலாக உள்ளது.
“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் இடர்ப்படுத்து சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீ தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத்தானே?”
பொருள்:
பிள்ளை இறந்து பிறந்தாலும், உருவமின்றித் தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அவற்றை ஆள் அல்ல என்று பழந்தமிழர் கருதமாட்டார்கள். மாறாக அவற்றையும் வாளால் கீறி வடுப்படுத்தியே அடக்கம் செய்தனர். ஏனென்றால் ஆணும் போர்க்களத்தில் விழுப்புண் பட்டே இறக்க வேண்டும் என்பது அவர்தம் ஆசையாக இருந்தது. தமிழர் மரபு இவ்வாறு இருக்க, ஒரு அரசன் போரில் அழியாது புண்பட்டு உயிர்பிழைத்தால், வெற்றி பெற்றவன் தோல்வியுற்றவனை, சங்கிலியால் பிணிக்கப்பட்ட நாய் போல துன்புறுத்துவான், அத்தகைய மனிதம் இல்லாத பகைவர், வயிற்றில் தீ போல இருக்கும் தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் உடனே தந்துவிடுவார்களா? காலம் தாழ்த்தி அவர்கள் தரும் தண்ணீரைக்குடித்து இந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதை விட உயிர் விடுவது எவ்வளவோ மேல்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
களவழி நாற்பது என்றால் களத்தைப் பற்றிப்பாடிய நாற்பது என்று பொருள். இதில் நாற்பது வெண்பாக்கள் தாம் இருக்க வேண்டும். ஆனால் இந்நூலில் 41 வெண்பாக்கள் இருக்கின்றன. எப்படியோ ஒரு வெண்பா வந்து சேர்ந்துவிட்டது. வெண்பாவிலே நாலு அடிகளுக்கு மேல் வருமாயின் அதைப் பஃறொடை வெண்பா என்பர். இந்நூலில் பஃறொடை வெண்பாக்களும் இருக்கின்றன. பஃறொடை-பல்தொடை; பல அடிகள் தொடர்ந்திருப்பவை.
களவழிப் பாடல்களிலே இரண்டு வகையுண்டு.
- உழவர்கள் நெற்கதிரை அறுத்துக் களத்திலே கொண்டுவந்து சேர்த்து. அடித்து, நெல்லைக் குவிக்கும் ஏர்க்களத்தைப் பாடுவது ஒன்று.
- நால்வகைப் படைகளையும் கொண்டு போர் செய்யும் போர்க்களத்தைப் பாடுவது மற்றொன்று.
ஏர்க்களம், போர்க்களம் இந்த இரண்டைப் பற்றியும் பாடும் பாடல்களுக்கும் களவழிப் பாடல்கள் என்று பெயர்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இந்தக் களவழி நாற்பது போர்க்களத்தைக் குறித்துப் பாடப்பட்டது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment