சங்ககாலத்தில் உழவும் வாணிகத் தொழிலும் சிறந்த தொழில்களாக விளங்கின. அதிலும் பழந்தமிழகத்தில் உள்நாட்டிலும், வெளி நாட்டோடும் வணிகம் சிறந்து விளங்கியது.
பல்வேறு வணிகக் குழுக்கள் இருந்துள்ளன. அவற்றுள்,
- சித்திரமேழிப் பெரியநாட்டார்(விவசாயிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட வணிகக் குழு)
- திசையாயிரத்து ஐநூற்றுவர்(எல்லாத் திசைகளிலும் வணிகம் செய்த ஐந்நூறு வணிகர்கள் கொண்ட குழு)
- அஞ்சுவண்ணத்தார்(இஸ்லாமிய வணிகக்குழுவினர் ஒருசார் வணிகர் குழு - பொதுநிலையில் அஞ்சுவன்னத்தார்என்பது முஸ்லிம்களைக் குறிக்கும் சொல். அஞ்சுக்கடமைகளைப் பேணுவோர், அஞ்சுநேரத் தொழுகையை நிறைவேற்றுவோர், என்பதால் அஞ்சுவன்னத்தார் முஸ்லிம்களைக் குறிக்கிறது)
- நானாதேசி (அனைத்து நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்தோர்)
- மணிக்கிராமம்(மணிக்கிராமத்தார் என்ற வணிகருக்குரிய பட்டம் பெற்ற வணிகர்கள்)
- வளஞ்சியர்(சோழ நாட்டின் வணிகக் குழுவிற்கு வளஞ்சியம்)
- பன்னிரண்டார்(நகரத்தார்)
- அத்திகோசத்தார்(வணிகர்களைப் பாதுகாப்பதற்காகப் பெருவழிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட யானைப்படையின் தலைவர் குழுவினர்)
- இருபத்துநான்கு மனையார்(நகரத்தார்)
- கூலவணிகர்(நவதானியங்கள் விற்போர்)
போன்ற வணிகக் குழுக்கள் தனித் தன்மையுடன் பேரரசுகளின் ஆதரவோடு இயங்கின.
பல வணிக நகரங்களை ஏற்படுத்தி, தங்களுக்கென்று பாதுகாப்பிற்கு வீரர்களை வைத்துக் கொண்டு, நாடுகளிடையே பல்வேறு சரக்குகளை எடுத்துச் சென்று, கடுமையான வழித்தடங்களைக் கடந்து, உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தலங்களோடு தொடர்பு கொண்டு வணிகம் செய்துள்ளன.
நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இந்த வணிகக்குழுக்கள் பயணக்கும் வணிகப்பெருவழிகள் இருந்துள்ளன. வணிகக் குழுக்கள் செல்லும் வழிகளிலுள்ள கோவில்களுக்கு கொடைகள் வழங்கியதைப் பற்றியும், சுங்கம் வசூலித்தது பற்றியும், சமணர்களுக்கு குகைத்தளங்கள், படுக்கைகள் ஏற்படுத்திக் கொடுத்ததைப் பற்றியும் பல்வேறு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
சித்திரமேழிப் பெரியநாடு சபை:-
பிற்காலச் சோழர்களின் நிர்வாக அமைப்பில் நாடு, கூற்றம், வளநாடு, மண்டலம் ஆகிய நிர்வாக அடுக்குமுறை பின்பற்றப்பட்டது. இதில் நாடுகள் என்பன பல்வேறு வேளாண் ஊர்களை உள்ளடக்கிய அமைப்பாகும். பல நாடுகளை உள்ளடக்கிய பகுதி கூற்றமாகவும் பல கூற்றங்களை உள்ளடக்கிய பகுதி வளநாடுகளாகவும் பல வளநாடுகளை உள்ளடக்கிய பகுதி மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. நாடுகள் தனித்த நிர்வாக அமைப்பாகச் செயல்பட்டபோதிலும் பிறநாடுகளுடன் பொருளாதார மற்றும் சமூகப் பண்பாட்டுச் சார்புத் தன்மைகளைக் கொண்டிருந்தன.
சோழராட்சியின் பதினோறாம் நூற்றாண்டின் இறுதியில் சித்திரமேழி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது கல்வெட்டாதாரங்களின் மூலம் அறிய முடிகிறது. சித்திரமேழி அமைப்பு என்பது எழுபத்தொன்பது நாடுகளின் கூட்டமைப்பாகச் செயல்பட்டது. இது உழவுத்தொழிலை முதன் மையாகக் கொண்டிருக்கும் வெள்ளாளர்களின் கூட்டமைப்பு ஆகும். இது எழுபத்தொன்பது நாட்டுப் பதினெண்பூமிச் சித்திரமேழி என்றும் சித்திரமேழிப் பெரியநாடு எனவும் அழைக்கப்பட்டது. சித்திரமேழிப் பெரிய நாட்டின் அங்கத்தினர்களை பெரியநாட்டார் எனவும் பெரியநாட்டு விஷயத்தார் எனவும் அழைக்கப்பட்டனர்.
சித்திரமேழி என்பதற்கு அழகிய கலப்பை என்ற பொருள்படும். இந்த கலப்பை தான் சித்திரமேழி பெரிய நாட்டின் அடையாளச்சின்னம். இவர்கள் செல்வாக்கு பற்றி பல கல்வெட்டுகள் பேசுகின்றன. இவர்கள் செல்வாக்கு வடக்கே‘சோலாப்பூர்’ தெற்கே திருநெல்வேலி வரை பரவியிருந்தது.
Burton_Stein பர்டன் இசுடெய்ன் அவர்கள் கூற்றுப்படி சித்திரமேழி பெரியநாட்டால் சோழப் பேரரசு பலவினமாகி நின்றது என்று கூறுகிறார். இந்த சபையே வரிவசூல் செய்து தன்னிச்சையாக செயல்பட்டது. இந்த அமைப்புக்கு ‘எறிவிரர், ‘தளவிரர்’,‘முனைவிரர்’ போன்ற வீரர்கள் பாதுகாப்பாக நின்றனர். மேலும் சித்திரமேழி அமைப்பினால் கைப்பற்றப்பெற்ற நிலங்களின் நான்கு மூலைகளிலும் சித்திரமேழி முத்திரை பெரிக்கப்பட்ட கல் நடுவதன் மூலம் சித்திரமேழி அமைப்பு தனக்கென தனித்த சட்டப்பூர்வ அதிகாரத்தைக் கொண்டிருந்ததனை அறிய முடிகிறது. மேலும் சித்திரமேழி அமைப்பின் உத்தரவிற்குக் கீழ்ப்படியாதவர்களைத் தண்டிக்கும் அதிகாரத்தையும் கொண்டிருந்தது என்பதனை ‘இப்படி விடாதார் பெரிய நாட்டார்க்குப் பிழைத்தார்’ எனும் தொடர் உறுதிப்படுத்துகிறது.
சித்திரமேழி அமைப்பு தனக்கென தனித்த மெய்க்கீர்த்தியுடன் செயல்பட்டிருப்பது அதன் முக்கியத்துவத்தையும் தனித்தன்மையையும் உற்றுநோக்க வைத்திருக்கிறது.
பெரியநாட்டார் எனக் குறிப்பிடப்படும் சித்திரமேழி மன்றத்தவர்கள் தமிழ் மட்டுமல்லாது வட நாட்டுக் கலைகளையும் நீதிநெறிகளையும் நன்கு அறிந்தவராக விளங்கினர் என்பதனைப் பின்வரும் கல்வெட்டுத் தொடர் எடுத்துக்காட்டுகிறது.
அறம் வளரக் கற்பமையப் புகழ் பெருக
மனு நெறி தழைப்ப நியாய-நடாத்துகின்ற
தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோயில் கல்வெட்டில் அண்ணன் தம்பி இருவரும் சண்டையிட்டுக் கொண்டபோதுஆத்திரத்தில் தம்பி அண்ணனை அடிக்க அண்ணன் இறந்து விடுகிறான். இக்குற்றத்தை விசாரித்த சித்திரமேழிப்பெரியநாட்டார் கொலைக்குற்றத்திற்கு அக்காலத்தில் மரணதண்டனை தான் வழக்கத்தில் இருந்த போதிலும் இக்குற்றத்திற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் குற்றவாளிக்கு வயதான பெற்றோர்கள் இருப்பதனாலும் அவர்களுக்கு வேறு மக்களும் பொருளும் இல்லாததன் காரணத்தினாலும் அவர்களைக் காப்பற்றும் பொறுப்பு குற்றவாளிக்கு இருப்பதனாலும் அவனுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டது.
…தொடரும்…