நடுகல்லும் தமிழர் வழிபாடும்
நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இவற்றை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர். வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக் கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.
பண்டைய காலத்தில் நடுகல்லை வழிபடும் வழக்கமே தமிழ்கூறும் நல்லுலகில் பிரதானமாக இருந்தது. போரில் மாண்ட மன்னனுக்கும்(அதியமான் நெடுமான் அஞ்சி), தொறு பூசல் இறந்த வீரர்களுக்கும் நடுகல் ஏழுப்பப்பட்டது. பக்தி இயக்கம் தமிழகத்தில் தீவிரமடையாத காலங்களில் இனக்குழு மக்கள் நடுகற்களை வழிபட்டு வந்தனர் என்றுணர முடிகின்றது
“கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”
- (புறம் 335)
விளக்கம்:- நடுகல்லாயினவரின் நடுகல்லைத் தொழுவதன்றி, நெல்லும் பூவும் சொரிந்து வழிபடக் கடவுளும் வேறு கிடையாது.
இவ்வழக்கம் தொல்காப்பியர் காலம் முன்னறே இருந்துள்ளதை அறியலாம்
“என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்ன
முன்நின்று கல்நின் றவர்”
எனப் போரில் இறந்த பகைவர் கல்லாகி (நடுகல்) நின்றதாகத் திருவள்ளுவரும் பதிவுசெய்கின்றார். எனவே நடுகல் மரபுஎன்பது நீண்ட வரலாற்றுப் பின்புலத்தினைத் தன்னுள் இணைத்துக் கொண்டுள்ளதனை அறியமுடிகின்றது.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” என்றார் வள்ளுவர்.
“கொல்லேற்றுக் கோடு அச்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்”
வீரர்களைத் தமிழ்ப் பெண்கள் விரும்பி, வீரமில்லாதவர்களை வெறுத்தனர்.
“கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்” என்ற பழமொழியும் நடுகல் வழிபாட்டின் அடிப்படையில்உருவானதே.
நடுகல் வழிபாடு அல்லது வீர வழிபாட்டிலிருந்தே கோவில் வழிபாடு உருவாகி இருக்க வேண்டும். பக்தி இயக்கத்தினால் நடுகல் வழிபாடு மன்னனிடத்தில் செல்வாக்கு குறைந்தது. ஆனால் பாமரமக்கள் நடுகல் வழிபாட்டை தொடர்ந்துவந்தனர். உதாரணம்: வேடியப்பன் வழிபாடு - திருவண்ணாமலை.
முல்லை நில பகுதிகளில் மெய்ச்சல் நிலம் என்பதால் அங்கு அடிக்கடி ஆநிரை கவரும் பூசல்கள் நிகழ்ந்தன. ஆனால், காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் விவசாயம் சார்ந்த மருத நிலத்தில் நடுகற்கள் மிக்க் குறைவாகவே உள்ளன.
பண்டையகாலத்தில் கால்நடைதான் செல்வம். ஆதனால் ஆகோள் பூசல் தமிழர்களின் வாழ்வில் அன்றாட நிகழ்வாக இருந்தது. சங்கதமிழில் “ஆநிரை கவர்தல்” = “வெட்சி தினை” என்றும்; “ஆநிரை மீட்டல்” = “கரந்தை தினை” என்றும் இலக்கணம் வகுக்கப்பட்டது. புறநானூற்றுப் பாடல்களில் வெட்சித் திணையை விட கரந்தை திணையில் தான் அதிகம் பாடல்கள் தொகுக்கப்பட்டது. தொல்காப்பியர் கரந்தைத் திணையையை வெட்சித்திணையின் ஒரு்பகுதியாகவைத்தார். ஐயனாரிதனார் கரந்தைத்திணையைத் தனித்திணையாகவே கொள்வார்.
ஆநிரை கவர்பவர் “மழவர்” என்றும்; மழவர்கள் ஆநிரை மிட்டலில் ஈடுபட்டதுல்லை. பெரும்பாலும் நடந்த சமூகமாற்றங்களுக்கு ஆட்கொள்ளாமல் அவர்கள் களவினையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர். ஆநிரைப் போர்களில் மாண்டவர்களுக்கே மிகுதியாக நடுகற்கள் எடுக்கப்பட்டன.
தமிழகத்தில் நடுகற்கள்:-
தமிழகத்தில் கண்டறியப்பட்ட நடுகற்களில் 80% செங்கம்-தரும்புரி ஒட்டிய பகுதிகளில்தான் அதிகம் உள்ளது. நன்னன் மரபினர் செங்கம் பகுதியையும், அதியமான் மரபினர் தரும்புரி பகுதியையும் சங்ககாலத்தில் ஆண்டு வந்தனர். திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கிருட்ணகிரி மாவட்டங்களில்தான் தொல் பழங்கால கோவில்கள் குறைவாகவும், நடுகல் வழிபாடு மிகுதியாகவும் உள்ளது. நடுகல் வழிபாடு இப்பகுதியில்தான் முதன்முதலில் ஏற்ப்பட்டிருக்க வேண்டும். இன்றும் நடுகல் வழிபாடு இப்பகுதி மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது.
நடுகல் தோற்றம்:-
தொல்காப்பியர் ஆநிரைப் போராகிய வெட்சித் திணையில்தான் நடுகல் குறித்தும் குறிப்பிடுகிறார். நடுகல்லை ஆறு நிலைகளாகத் தொல்காப்பியர் கூறுகிறார்.
- காட்சி
- கால்கோள்
- நீர்ப்படை
- நடுதல்
- பெரும்படை
- வாழ்த்தல்
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தரு சிறப்பின் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணர”
- தொல்காப்பியம்
யாருக்கு அமைக்கப்படும் நடுகல்?
போரில் இறந்த வீரர்கள், பசுக்களை மீட்டவர்கள், பத்தினிப் பெண்கள் ஆகியோர் நடுகல் எடுப்பதற்கு தகுதியுடையவர்களாக கருதப்பட்டனர். போரில் இறந்தவர்களுக்காக நடுகல் அமைக்கப்பட்ட செய்தியை அகநானூறு பாடலிலும், பசுவை மீட்டவர்களுக்கு நடுகல் அமைக்கப்பட்ட செய்தியை புறநானூறு பாடலிலும், பத்தினிப் பெண்களுக்கு நடுகல் அமைக்கப்பட்ட தகவலை சிலப்பதிகாரத்திலும் காணலாம்.
எனினும், ஒருவர் உயிர் நீத்த பின்னரே, நடுகல் அமைக்கும் பழக்கம் பழந் தமிழர்களின் வழக்கமாக இருந்ததை அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் வாயிலாக அறியலாம்.
சங்க காலத்தில் வீரர்களின் வீரத்தைப் போற்றும் வகையிலும், அவரது உயிர்த் தியாகத்தை மதிக்கும் வகையிலும், வீரனின் உருவம் பொறித்த நடுகல்லை நட்டு, அதை வழிபடுவது பழங்கால தமிழர் மரபின் அடையாளமாகவே இருந்துள்ளது.
சங்கப்புலவர்கள் ஏறக்குறைய இருபத்தைந்து நபர்கள் நடுகல் தொடர்பான பாடல்களைப் பாடி உள்ளார்கள். நடுகல் வழிபாட்டினை பின்வருமாறு புறநானூறு கூறுகிறது.
புறநானூறு 264
பாடியவர்: உறையூர் இளம்பொன் வாணிகனார், திணை: கரந்தை
துறை: கையறு நிலை
“பரலுடை மருங்கில் பதுக்கை சேர்த்தி,
மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு,
அணி மயில் பீலி சூட்டிப், பெயர் பொறித்து,
இனி நட்டனரே கல்லும்”
விளக்கம்:- பரல் கற்களையுடைய மேட்டு இடத்தில் மரல் செடியிலிருந்து எடுத்த நாரால் தொடுத்த சிவந்த மலர்ச் சரங்களுடன், அழகான மயிலின் இறகைச் சூட்டி, அவனுடைய பெயரைப் பொறித்து நடுகல்லை இப்பொழுது நட்டிவிட்டார்களே!
புறநானூறு 265,
பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்,
திணை: கரந்தை,
துறை: கையறு நிலை – பண்ணனின் மறைவிற்குப்பின் எழுதப்பட்டது
“ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
பல் ஆன் கோவலர் படலை சூட்டக்,
கல் ஆயினையே, கடு மான் தோன்றல்”
விளக்கம்:- பறந்தலை=இடுகாடு. ஊரை மிகவும் கடந்த, பாறைகள் நிறைந்த பாழிடத்தில், உயர்ந்த நிலையையுடைய வேங்கை மரங்களின் ஒளியுடைய கொத்தாகிய நறுமணமான மலர்களைப் பனை ஓலையால் அலங்கரித்துத் தொடுத்து, பல பசுக்களையுடைய இடையர்கள் மாலைச் சூட்டி வழிபடும் நடுகல் ஆகிவிட்டாயே நீ!!
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
“இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி,
நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய,
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்,
அருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று
அரவுஉறை புற்றத்து அற்றே, நாளும்
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை,
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே”
விளக்கம்:- வீட்டிலே காய்ச்சிய கள்ளை அந்தச் சிற்றூரில் உள்ள குடும்பத்தினர் கூட்டமாகச் சென்று முன்னோரின் நடுகல்லுக்கு பகல் பொழுதில் படையல் செய்வர். அப்போது நடுகல்லை நீராட்டுவர். நெய்யிட்டு விளக்கேற்றி வைப்பர். அந்த நெய்விளக்கு மேகம் போலப் புகை விட்டு எரியும். எரியும் நெய்யின் மணம் ஊர்தெருவெல்லாம் கமழும். இது ஒரு போர்முனையாகத் திகழும் ஊர். இதன் அரசன் வழங்குபவர் படும் துன்பத்தை எண்ணிப்பார்க்க மாட்டான். இருப்பு வைத்துக் க்கொள்ளாமல் இரவலர்களுக்குத் தன்னிடம் உள்ள பொருளை எல்லாமுமாக வழங்குவான். இவ்வாறு அவன் நற்பெயர் பெற்றிருந்தான்.
நடுகற்களின் வகைகள்:-
நடுகற்களின் அமைப்பு, செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளைப் பல்வேறு வகையாகப் பிரிக்கலாம். போரில் வீரமரணம் அடைந்தவருக்கு மட்டுமின்றி வெவ்வேறு காரணங்களுக்காக இறந்தவர்களுக்கும் நினைவுக்கற்கள் மக்கள் தோற்றுவித்தனர்.
- தொறும்புசல் நடுகல்
- வடக்கிருத்தல் நடுகல் (எ.கா. கோப்பொருஞ்சோழன்)
- சதிக்கல் (எ.கா. கண்ணகி வழிபாடு)
- கடலுள் மாய்ந்தோர் கல் (எ.கா. இளம் பெருவழுதி-பாண்டிய மன்னன்)
- சித்திரமாடம் துஞ்சியோர் கல் (எ.கா. நன்மாறன்-பாண்டிய மன்னன்)
- ஊர்க்காத்தான் கல்
- பெண் மீட்டான் நடுகல்
- அறம் காத்தான் நடுகல்
- கழிபேராண்மை நடுகல்
- சாவாரப் பலிக்கல்
- நிசீதிகை (சமண துறவி)
- புலிக்குத்திப் பாட்டான் நடுகல்
- பன்றிக்குத்திப் பாட்டான் நடுகல்
- குதிரைக்குத்திப் பாட்டான் நடுகல்
- யானை குத்திப்பாட்டான் நடுகல்
- நாய்க்கு நடுகல்
- எருதுக்கு நடுகல்
- கோழிக்கு நடுகல்
- நவகண்டம்
- ஏறுதழுவல் நடுகல்
நடுகல் வீரன் சிற்பங்களில் அரையாடை மட்டும் அணிந்திருப்பதைக் காண்கிறோம். அரையாடையில் உறையும் அதில் குறுவாளும் காட்டப்படுவதுண்டு. ஏறக்குறைய 85% நடுகற்கள் கிழக்கு நோக்கியபடி உள்ளன. ஊருக்குத் தள்ளியே களர் நிலங்களில், பாதை ஓரங்களில், மரநிழல்களில் உள்ளன.
ஆநிரை தொடர்பான போர் அல்லது மாடுபிடி சண்டையில் இருவகை உண்டு.
1. மன்னிறு தொழில்:- மன்னனின் அனுமதி பெற்று போர் தொடுப்பது ஒரு வகை
2. தன்னிறு தொழில்:- மன்னனின் அனுமதியின்றி பெற்று போர் தொடுப்பது ஒரு வகை
தன்னிறு தொழில் தான் பெருவழக்காக இருந்தது.
ஆர்மர் ஓட்டல்:- நிரை கவர்ந்த மறவரைக் கரந்தை வீர்ர் தோற்றோடச் செய்தலே ஆரமர் ஓட்டல் ஆகும்.
ஆபெயர்த்துத் தருதல்:- ஆநிரை கவர்தலோ, மீட்டலோ பூசல் (போர் அல்ல) என்பதால் ஆநிரை மீட்பது குறுநிலமன்னன் அல்லது வீரனின் பொறுப்பு.
தமிழக நடுகற்கள்:-
தொல்காப்பியர் நடுகல்லை பற்றி குறிப்பிடும்போது எழுத்துக்களை பற்றி கூறவில்லை. இவை பிற்காலத்தில் வந்தவை. தமிழகத்தில் 2004ஆம் வரை 320 நடுகற்கள் படிக்கப்பட்டது அதில் 248 நடுகற்கள் எழுத்துடையவை.
- கி.பி. 600 வரை - 36 நடுகற்கள்
- கி.பி. 600-800 வரை - 92 நடுகற்கள்
- கி.பி. 800-1000 வரை - 90 நடுகற்கள்
- கி.பி. 1100-1600 வரை - 95 நடுகற்கள்.
180 நடுகற்கள் மன்னன் பெயர் குறிப்பிடுவதாகவும் உள்ளது.
வீரயுகம்:-
அகம், புறம் என வாழ்க்கையை பிரித்துக்கொண்ட தமிழர்கள்; புறத்தில் போர்களை குறிப்பிட்டுள்ளனர். “புறப்பொருள் வெண்பாமாலை” என்ற நூல் புறத்திணைகளை மட்டும் சொல்லும் இலங்கண நூலாகும்.
கால்நடை போன்ற அசையும் சொத்துக்காகவே முதலில் போர்கள் எற்பட்டிருக்க வேண்டும். கால்நடைக்காக நடைபெற்ற போரை “வெட்சிப் போர்” என்று கூறுகிறது தொல்காப்பியம். மண்ணாசையால் நடந்த போருக்கு “வஞ்சிப் போர்” என்று பெயரிட்டனர்.
வீரயுகத்தில் ஒருவனை ஒருவன் அழித்தலும், அடக்குவதும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை என்று சங்ககால புலவர் பாடியுள்ளார்.
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை :வாகை.
துறை: அரச வாகை.
“ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடிப்,
பாடின் தெண்கிணை கறங்கக், காண்தக,
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்,
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க,
ஒருதான் ஆகிப் பொருது, களத்து அடலே!”
விளக்கம்:- தலையாலங்கானப் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் ஏழு அரசர்களை எதிர்த்துப் போரிட்டதைக் கண்ட புலவர் இவ்வாறு பாடுகிறார். ஒருவனை ஒருவன் தாக்கிப் போரிடுவதும், அப்போது ஒருவனோ அல்லது இருவருமோ மாண்டுபோவதும் இயல்புதான். ஆனால் ஒருவன் ஏழு பேரைத் தாக்கி அழித்தல் புதுமையானது. அதனை இன்றுகண்டோம். இதற்கு முன்பு கண்டதில்லை. பசும்பூண் செழியனின் பெருமையையும் செம்மாப்பையும் அறியாமல்அவனை எதிர்த்துப் போரிடுவோம் என வந்த எழுவரின் கொட்டம் அடங்க வேப்பம்பூவும், உழிஞையும் சேர்த்துத்தலையில் சூடிக்கொண்டு, கிணைப்பறை முழக்கத்துடன் போரிட்டு அழித்தலை இன்றுதான் காண்கிறேன்.
அந்த காலகட்டத்தில் ஓயாத போர் நடந்துகொண்டே இருந்தது.
வெண்ணிக்குயத்தியார் என்ற புலவர் கரிகால சோழனிடம் பின்கண்டவாறு கூறுகிறார். “வென்ற நினக்கு (சோழன்), வெற்றிப் புகழ்; தோற்ற சேரனுக்கோ வீரப்புகழ்”. வெற்றிப்புகழை காட்டிலும், வீரப்புகழ் சிறந்ததாகும் (புறம் 66)
கடவுளின் பரிணாமம்:-
மக்களின் அச்சத்தின் காரணத்தால் தான் கடவுள் வழிபாடு பரிணமித்தது. நடுகல் வழிபாடும் ஏனைய வழிபாடும் பழங்குடி மக்களின் அச்சம் மற்றும் அறியாமை காரணமாக எழுந்த வழிபாடேயாகும். நடுகல் வீர்ர்களின் ஆன்மா ஊரையும், கால்நடைகளையும் பாதுகாக்கும் ஆற்றல் உண்டு என்று நம்பிக்கை பழங்குடி மக்களிடம் இருந்தது.
இறந்த முன்னோர்களின் வழிபாடே பிற்காலத்தில் கடவுள் சிந்தனைக்கும், தோற்றத்திற்கு அடிப்படையாயின என்று கிராண்ட் ஆலன் என்பவர் தன்னுடைய புத்தகத்தில் “கடவுளின் பரிணாமம்” (The Evolution of God) கூறுகிறார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி :- “நடுகல்” நூல் - ச . கிருட்ணமூர்த்தி.