வரலாறும் வக்கிரங்களும்
வரலாறும், வக்கிரங்களும் என்ற இச்சிறுநூல் வரலாற்றாய்வாளர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகும். இந்த நூல் The Past and Prejudice என்ற நூலின் தமிழாக்கமாகும். நூலாசிரியர் ரொமீலா தாப்பர் அறிவுலகம் நன்கறிந்த தலைசிறந்த இந்திய வரலாற்றாய்வாளர்களில் முதன்மையானவர். இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான, வரலாற்றாய்வை வளர்க்க வழிகாட்டத்தக்க ஒரு நல்ல நூல் இது
வரலாற்றை எவ்விதமாக ஆய்வு செய்யவேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக விளங்கும் ரொமீலா தாப்பரின் இந்நூல், இந்தியாவைப் பற்றி சமூக விஞ்ஞான முறையில் ஆழ்ந்து ஆய்வு செய்துள்ளது.
இந்நூலிலிருந்து சில குறிப்புகள்:-
👉வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளை வெறுமென பட்டியலிட்டுக் காட்டுவதல்ல. மாறாக உற்பத்திக் கருவிகள் படிப்படியாக முன்னுக்கு வந்ததன் விளைவாக சமூகத்தில் ஏற்பட்டு வந்த மாறுதல்களை அறிவதேயாகும்
👉விபரங்களை சேகரித்து அவற்றிலிருந்து உண்மைகளை கண்டறிந்து அந்த உண்மைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கவேண்டும் என்ற உயரிய அறிவுபூர்வமான பொதுக் கோட்பாடு வரலாற்று ஆய்வுக்கு மிகமிக அவசியமானதாகும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் தங்கள் வசதிக்கேற்ப ஒரு முடிவை அல்லது முடிவுகளை எடுத்துவிட்டு அவைகளுக்கேற்ப “விபரங்களை சேகரிப்பதிலும் அல்லது உண்மை விபரங்களை திரித்து திசை மாற்றுவதிலும் ஒரு சாரார் எப்போதுமே ஈடுபட்டு வந்துள்ளனர். இப்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.
👉எத்தனையோ பண்பாட்டுகளின் கலப்பில் இந்திய பண்பாடு உதயமாயிற்று. அவற்றுள் முக்கியமான இரு பண்பாடுகள் திராவிட பண்பாடு மற்றும் ஆரியப் பண்பாடு
👉திராவிட மொழியிலிலிருந்து பிறந்த சொற்கள் ரிக் வேதத்தில் உள்ளன. சமஸ்கிருத மொழியின் வளர்ச்சியை வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால், திராவிட மொழியிலிருந்து கடன் பெறப்பட்ட சொற்களில் பெரும்பான்மையானவை. கி.மு. 1000-லிருந்து 500 வரையிலான காலத்தில் நுழைந்தவை என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. இக்காலத்தையே பிற்கால வேத காலம் என்று குறிப்பிடுகிறார்கள்.
👉கி.மு 1500ற்கு முன்னால் ஆரிய மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே இனக்குழு சமுதாயங்கள் இருந்தன என்பது அகழ்வாராய்ச்சியால் புலனாகிறது. கி.மு 3000 ஆண்டிலேயே “ஏருழுவு” முறை இருந்ததென்பதை ஹரப்பா ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. ஆரியர்கள் வருமுன் இங்கு வாழ்ந்தவந்த பூர்விக மக்களிடமிருந்து அவர்கள் கற்றுக்கொண்டனர் என்று தெரிகிறது. வேதங்களில் காணப்படும் விவசாயம் குறித்த சொற்கள் ஆரியமில்லாத மொழிகளிலிருந்து பெறப்பட்டவை. “லாங்கலா”, “ஹலா” (ஏர்), குட்டலா (களம்), கலா (கூடை), உலுகாலா (உரல்), பள்ளி ( சிறு கிராம்ம்) முதலியன.
👉குப்தர் காலத்திற்கு மற்றும் கி.பி. 500-க்கு பின்னர், நிலங்களும், கிராமங்களும் கோயில்களின் உடைமைகளாயின. ஏராளமான நிலவருவாயும், காணிக்கை வருவாயும் அவற்றிற்குக் கிடைத்தன. கோயில் நிதியை நிர்வகிக்கும் பதவிகள், அரசரது ஆதரவைப் பெற்றவர்களுக்கே கிடைக்கும். கோயில்கள் கல்வி நிறுவனங்களாகி, பிராம்மணீயக் கல்விக்கு நிறுவன அடிப்படையை அமைத்தன. மடங்கள், கோயில்களின் மூலம் பிராம்மணீயக் கருத்துகள் திட்டமிட்ட வகையில் பரவ வழி பிறந்தது.
👉சத்திரியர்கள் பிராம்மணர்களோடு ஒத்துப்போவது ஒரு பிரச்சனையாகிவிட்டது. இப்பிரச்சினைக்கு அடையாளபூர்வமான புனைகதைதான் பரசுராமன் கதையாகும். பௌத்த நூல்கள் சத்திரியனுக்கு நிலவுடைமை யாளன், குழுத் தலைவன் என்ற நிலைகளில் முக்கியத்துவம் அளிக்கிறது. கொள்கையளவில் அரசர்கள் சத்திரியர்களாக இருத்தல் வேண்டும். ஆனால் குப்தர் காலத்திற்கு முன்னர் சத்திரிய அரசு பரம்பரைகள் அபூர்வமாகவே காணப்படுகின்றன. நந்தர்கள், சூத்திரர்கள், மௌரியர்கள், ஆகியோரை தாழ்ந்த குலத்தவர் என பிராம்மண நூல்கள் கூறுகின்றன. சுங்கர்கள், சேதியர், சோழர், பாண்டியர், சேரர், ஆந்திரர் ஆகியவர்கள் சத்திரியர்கள் அல்ல. அவ்வருணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ள வில்லை
👉இனக்குழுக்களும், படை குழுக்களும், தொழில் குழுக்களும் சாதிகளாக மாறியபொழுது, அவற்றிற்கு வருண அந்தஸ்தும், சாதி அந்தஸ்தும் அளிக்கப்பட்டன
👉சாதிப் புராணங்களின் நோக்கம், சாதிகளின் பழைய மரபைப் பாதுகாத்து சாதி அடுக்கின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவற்றைப் பொருத்தி வைப்பதுதான்
👉பண்டைய சட்ட நூல்கள், அரசன் உழவர்களிடமிருந்து மகசூலில் ஆறில் ஒரு பாகத்தை வரியாகப் பெறவேண்டுமெனக் கூறுகின்றன. இதற்கு ‘சட்பாகம்’ என்று பெயர், அரசனை ‘சட்பாகி’ என்று கூறுவர்.
அரசன் ஏவலால் கூலியின்றி உழைக்க வேண்டிய கடமையை உழவர்களுக்கு நீதி நூல்கள் விதித்தன. இதற்கு “விஷ்டி” என்று பெயர். இதை தமிழில் “வெட்டி” என்று பெயர். இத்தகைய உழைப்புக்கு ஆள் கொண்டு வந்து வேலையை மேற்பார்ப்பவன் “வெட்டியான்” என்று கூறுவர்.
வரி எல்லா இடங்களிலும் ஒரேமாதரி இல்லை. சில இடங்களில் ஆறில் ஒரு பங்காகவும், வேறு சில இடங்களில் மூன்றில் ஒரு பங்காகவும் அல்லது இரண்டில் ஒரு பங்காகவும் இருந்தது.
👉பிராம்மணர்களும், சத்திரியர்களும்தான் கொடுங்கோன்மையை எதிர்க்கும் உரிமை உண்டென்று பிராம்மண நூல்கள் கூறுகின்றன. உழவர்கள் ஆயுதம் தாங்கக் கூடாது என்ற தடையும் இருந்தது.
👉பாசன வசதிகளைத் தோற்றுவிப்பதில் தமிழர்களின் அக்கறை மெகாலிதிக் காலம் முதலாகவே காணப்படுகிறது. கிராம சபைகளான “ஊர்”, “சபை” நிறுவி நிலங்களை பராமரித்து வந்தனர். 10ஆம் நூற்றாண்டிற்கு பிறகு பிராமனர்களுக்கு அதிக நிலங்கள் தானமாக கொடுக்கும் நடைமுறை தமிழகத்தின்குள் வந்தது. இதன் காரணமாக ஊர் சபைகள் பிராமணர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.
👉தற்கால மக்கள் தங்களை எதனோடு ஒன்றி நிற்க வேண்டும் என்று பழமையில் தேடுகிறீர்கள். சிதறி கிடக்கும் பல பழமை தன்மையில் ஏதாவதொன்றோடு ஒன்றிக்கொள்கிறார்கள். நாம் பழமையின் பெருமை என்று கூறி வரலாற்றை தவறாக அறிந்து கொண்டிருக்கிறோம். பழமை மேன்மையானது, பொற்காலம் என்ற கருத்தால் பாதிக்கப்பட்டு, சமூக செயல்முறைகளை அறிய முடியாமல் திண்டாடுகிறோம். சமூகம், விஞ்ஞானம் சார்த்த அறிவின் தேடல் நம்மை சிற்றெல்லையில் இருந்து மிட்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment