பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்


 
திரு. கைலாசபதியின் “பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்” என்னும் நூலில் இருந்தும் மற்றும் நண்பர்களிடம் இருந்து விளக்கம் ஆகியவற்றின் தொகுப்பு

இப்பதிவின் நோக்கமே காலகாலமாய் நம்மில் ஊறிக்கிடக்கும் கண்முடித்தனமான பழமைவாதம், காரணமற்ற சுயதிருப்தி, வீண்தற்பெருமை அடையாளம் காண ஆசிரியருடன் சேர்ந்து நாமும் முயற்சிப்போம்.

    “பெரியோரை வியத்தலும் இலமே;

      சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

In Retrospect…

பொருளாதர நிலை என்னும் அடித்தளத்தின் மேலேதான் கலை, இலக்கியம், மொழி, தத்துவம், சமயம் ஆகிய மேல்களங்கள். அறத்தொடு பொருள் ஈட்டி இன்புற்று வாழ்தலே, தமிழரின் தலையாய பண்பு. (அறம், பொருள், இன்பம்). வாழ்க வளமுடன். 

புராதான மனிதன் கூட்டு வாழ்க்கையின் மூலமாகவும் வீளைவாகவும், கருவிகளின் உபயோகத்தை மெல்ல மெல்ல அறிந்து கொண்டான். தனது சிற்றறிவின் துணைக்கொண்டு, தனது கருவியின் துணைக்கொண்டும் இயற்கையைச் சாமாளிக்க வேண்டியவனாய் இருந்தான். அவனது கருவியும், சிற்றறிவும் செம்மைப்பட செம்மைப்பட இயற்கையின் அகலக்காட்சி விரிவடைகிறது. இயற்கையின் முழுதன்மையையும் அறிந்துக்கொள்ள பெரும்முயற்சியில் இறங்குகிறான். தனக்குள் இருந்த உணர்ச்சி, அச்சம், ஆசை முதலியவற்றை கொடுப்பது யாது என்று அவனுக்கு தெரியாது. அது ஒரு “ஆவி”/“ஆத்மா” என்று எண்ணினான். அதனால் சடங்குகள், மந்திர சக்திகள் மூலமாக அதனை கட்டுப்படுத்த முயன்றான். ஆனால், மத்திரசக்தி என்று அவன் கருதிய எல்லாம் அவனுடைய “சிந்தனைக்குத் தப்பிய” உணர்வுகளே. 

உயிரைப் பாதுகாத்தலும் வளர்த்தலும் மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. உயிரை போற்றும் புராதன மந்திர சடங்குகளிலிருந்தே “அன்னை வழிபாடாக”, “குத்துக்கல் (Menhir)”, “நடுகல் வழிபாடாக”, “மரவழிபாடாக” பரிமாணம் பெற்றது. அன்னை வழிபாடு முறையைப் போற்றி வந்த மக்கட்கூட்டம் ஒரு காலத்தில் “மத்திய கிழக்கு” முழுவதும் பரவியிருந்தனர். பூர்விகத் திராவிடர் மக்களும் இக்கூட்டத்தை சேர்தவர்களே.

ஆரியர்களின் வருகைக்கு முன் சிந்து சமவெளியில் (Indus Valley Civilisation - 3300 BC to 1300 BC) தாய்-தெய்வவழியாடுதான் முதன்மையாக இருந்தது. ஆரியர்களின் வருகையின் பொழுது சிந்து சமவெளி நடந்த சம்பவத்தை ரிக் வேதத்தில் மேற்கொள்காட்டி ஆசிரியர் கூறுவதாவது, “வச்சிராயுதம் ஏந்திய வேதகால ஆரியக்கடவுள் ‘இந்திரன்’ மண்பாண்டத்தை உடைப்பதுபோல எதிரிகளை வென்றான்… நீண்ட நாடகம் ஒன்றின் முதலாம் அங்கம் முடிவடைந்ததுபோல மேடையில் திரை வீழகிறது…வெற்றி வீரனான இந்திரனும் அவனது சகாகளும் சோமபானம் அருந்திக் களிக்கும் எக்காளச் சிரிப்பு மட்டும் எமக்கு கேட்கிறது. ஆனால் மீண்டும் திரைவிலகும் பொது தோற்றவர்ககளை மட்டும்யின்றி வென்றவர்களியுமே காணவில்லை.“ 

ஆரிய வருகைக்கு பின், சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக தமிழ் நிலப்பரப்புக்கு இடம் பெயர்ந்தார்களா, உத்தரப் பிரதேசம், பீகார் வழியாக கங்கைச் சமவெளிக்கு இடம்பெயர்ந்தார்களா என்பது இதுவரை விடைகாண முடியாத கேள்வியாக இருந்தது. “தென்னிந்தியப் பகுதிகளில் வளர்ச்சி பெற்ற நாகரிகங்கள் இல்லை”, கங்கைச் சமவெளி நாகரிகமே பழைமையானது என்று வடக்கு வரலாற்றாசிரியர்கள் தொடர்ந்து எழுதி வந்தார்கள். “வைகை நதி நாகரிகமும்”, “பொருநை நதி நாகரிகமும்” அந்தக் கற்பிதத்தை உடைக்கின்றன. சிந்து சமவெளியில் கிடைத்ததைப் போன்ற உருவ எழுத்துகள், குறியீடுகள், தமிழ் எழுத்துகள், பகடைக்காய்கள், திமில் உள்ள காளைகளின் எலும்புகள், கறுப்பு சிவப்புப் பானையோடுகள் வைகை, பொருநை நதிக்கரைகளிலும் கிடைத்துள்ளன. ஆகமொத்தம் ஏறத்தாழ “தமிழ் நாகரிகம்” இன்றிலிருந்து 3200 ஆண்டுகள் (இது குறைந்தபட்ச அளவுதான்) பழமையானது என உறுதியாகியுள்ளது.

தமிழ் நாகரிகத்திலும் மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்திலும் தாய்-தெய்வ வாழிபாடுதான் முக்கியமாக இருந்துவந்துள்ளது. சில எ.கா: - மோட்டூர் (திருவண்ணாமலை), உதயநத்தம் (விழுப்புரம்). ‘ஆதிச்சநல்லூரில்’ தாழியில் மான், மயில், பயிர்கள் மற்றும் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண் (கொற்றவை) வரையப்பபட்டுள்ளது. பல பழம்நாகரிகங்களில், கருவுறுதல் தெய்வத்தை (Fertility Goddess) வழிபட்டு வந்தனர். இலிங்க வழிபாடும் பல நாகரிங்களில் வளமைக்காக தெய்வமாக வணங்கப்பட்டது.

மோட்டூர் (திருவண்ணாமலை)
உதயநத்தம் (விழுப்புரம்)

தாழியில் மான், மயில், பயிர்கள் மற்றும் கொற்றவை

வேதகாலத்தில் (Vedic Period - 1500 BC to 500 BC) வட இந்திய பகுதிகளில் “இந்திரன், வருணன், மிந்திரன்,பிரஜாபதி, மந்தரிசுவன்” ஆகிய ஆரிய தெய்வங்கள் முதன்மையாக இருந்தது. Jainism (பார்சுவநாதர்-appr. 870BC) and Buddhist (appr. 550 BC) - வேதத்தை மற்றும் பிராமண கோட்பாடுகளை எதிர்த்து உருவானதுதான் சமணமும் பௌத்தமும். (refer Assalayana Sutta)

புராணங்களின் காலம் (Post-Vedic Period -appr. 600 BC) ஆரியர்கள் வேதத்தில் இருந்து புராணக்கதைகளில் தஞ்சம் புகுகின்றனர். இந்த பழக்கம் இன்றும் தொடர்கிரது. வேதகாலத்திற்கு பிற்பட்ட இந்து சமய வளர்ச்சியிலே, வேதகாலக் கடவுள்கள் முக்கியத்துவம் இழந்துவிடுகின்றனர். வேதகாலத்திற்கு பிற்பட்ட “புராணக் காலங்களில்” தான் “சிவன்”, “விஷ்னு” சிறப்பான இடத்தை பெருகின்றனர்.

தமிழகத்தில், தொல்காப்பியர் (appr 300BC-uncertain) இயற்றிய “தொல்காப்பியம்-பாடல் எண்:5

     “மாயோன் மேய காடுறை யுலகமும்,

      சேயோன் மேய மைவரை யுலகமும்,

      வேந்தன் மேய தீம்புன நுலகமும்,

      வருணன் மேய பெருமண லுலகமும்

      முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச்,

      சொல்லி முறையான் சொல்லவும் படுமே”.

இதில் பழந்தமிழ் தெய்வங்களும் நிலப்பாகுபாடும் காட்டுகின்றது. அவை “மாயோன், சேயோன், வேத்தன், வருணன்” கூறும் இந்நூல், பிற்கால்ச் சைவத்தின் பரம்பொருளாகிய சிவனைக் தமிழ்நிலத்தின் தெய்வமாக குறிப்பிடவில்லை.

திருமுருகாற்றுப்படையிலும் (2nd to 4th AD) 

        “வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ” 

என்றுதான் உள்ளது. சிவனுடைய மகன்யென்று எங்கும் சொல்லவில்லை. பூசை செய்யும் தனி வகுப்பினர் யாரும்யின்றி, மக்கள் கூட்டாக வழிபடும் முறையே “முருக வழிபாட்டு முறை”. எ.கா. “சாளுவன்குப்பம்” (மாமல்லபுரம்) இருக்கும் முருகர் கோவில் இதற்கு சான்று. திமிங்கலத்தின் கெலும்பை வேல்போல நட்டு வைத்து அதை சுற்றி பாடி ஆடி வழிபட்டனர். இந்த “முருக வழிபாட்டு முறையை” வழக்கொழிக்க “பல” சித்தரிக்ப்பட்ட கதைகளை சேர்க்கப்பட்டது.

சிவ வழிபாடு சிறப்புற்ற காலத்தில் “கொற்றவை” சிவனின் சக்தியான மலைமகளாகவும், முருகன் சிவனின் மகனாகவும் “புதிய” உறவுமுறை பெறுகின்றனர்.

“தாய்வழி உரிமை சமுதாயத்தை” கடைபிடித்த தமிழ்கூறும் நல்லுலகத்தில்; அந்தணர் மடம், சமண பள்ளி, பௌத்த பள்ளிகள் தங்கள் கொள்கைகளை மக்களிடம் பறப்ப நிறுவினர். தமிழ் மக்களை கவர்வதற்றகாக, தமிழ் மண்ணின் தெய்வங்களை, அவர்கள் உருவாக்கிய தெய்வத்தோடு “உறவு” முறைப் படுத்தி கொண்டனர். 

பல்லவர்கள் காலத்தில்தான் சைவம் தழைத்தோங்க துவங்கியது. 6ஆம் நூற்றாண்டு (600 - 630 AD) காஞ்சியை ஆண்ட மகேந்திரபல்லவன், சமண மதத்தில் இருந்து, நாயன்மார்களின் ஒருவரான “அப்பரால்” சைவ சமயத்திற்கு மாறினான். ஒரு வாசகத்திற்கும் உருகாதவரையும் உருக்கும் திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் சைவ சமயத்தை பரப்பினார். நாயன்மாருடைய திறமையை பாராட்டும் அதேசமயத்தில் வேற்றுச் சமயத்தவர்பால் மாளாத வெம்பகை தோன்றுவதற்கும் காரணமாக இருந்தனர். அது சமண-பௌத்த-வைதீக மதபூசலில் மன்னர்களின் துணைகொண்டு சமணமும் பௌத்தமும் வழக்கொழிக்கப்பட்டது. பின்னர் சைவ-வைணவ மதபூசலாக இன்று வரை நீடித்தது. அதைபோல, மதுரையை ஆண்ட நெடுஞ்செழியன் என்ற கூன் பாண்டியனை சமண்சமயத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாற்றினார் திருஞானசம்பந்தர். ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த 8000 சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணந்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று பெரியபுராணம் மூலம் அறியமுடிகிறது. 

சைவ-வைணவ சமயம் வளர இதுமட்டும் காரணம் அல்ல, சமணத்தின் கொள்கையும் ஒரு காரணம். சமணம் கூறுவது “முன்பு செய்த பாவங்களை அனுபவித்து கழித்தால்தான், “வீடுபேறு” கிடைக்கும்.” இது சமணத்தத்துவத்தின் தூண். இதற்கு மாற்றாக,“வினைப்பயன் முதலிய யாவற்றிற்கும் மேலாக உள்ளான் இறைவன்” சைவ-வைணவமானது கூறியது. இறைவனை பற்றினால் எந்த பாவங்களியிருந்தும் விடுதலை கிடைக்கும் என்று கூறியது. இன்னொரு காரணம் மொழி, முற்காலத்தில், தமிழில் பல இலக்கியம் இயற்றிய சமணம், பிற்காலங்களில் பிராகிரதம்/வடமொழி பக்கம் தன்னை நிலைநிறுத்தியது. ஆனால், சைவமும்-வைணவமும் “தமிழை” இறுகப்பற்றிக்கொண்டது. “நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்” என்றெல்லாம் சிறப்பித்தனர்.அறுபத்து மூன்று நாயன்மார்கள் பலர் இசை வல்லுவர்களாகவும் இருந்தனர். தமிழை கொண்டு சைவத்திற்கு உரம் ஏற்றினர். 

ஆக மொத்தத்தில், 6-7ஆம் நூற்றாண்டின்பொழுது “பெயர் தெரியாத சிந்துவெளிக் கடவுள், பெயரும் குணமும் பெற்றுச் சிதம்பர நாதனாகிவிடுகிறான்”

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான குலங்களிலிருந்து (tribes) காலப்போக்கில் மூன்று அரசுகள் உருவாகின. உதாரணரமாக, பாண்டியன் நெடுஞ்செழியன் பல கிளைச் சமூகங்களை அழித்துப்பாண்டிய நாட்டை உருவாக்கிய மன்னர்களில் ஒருவன். எழு வேளிர் கிளைகளை தலையாலங்கானத்துப் போரில் வென்று அடக்கியவன். அவ்வாறாக பல குழுக்களை ஆழித்து/அடக்கி முடியுடைவேந்தர் தலைதூக்கினர். போரிட்டும், கொள்ளையடித்தும் வந்த பொருளை, புலவர்களுக்கு உரிய பங்கு கொடுத்தனர். பல புலவர்கள், மன்னனை புகழ்பாடி பரிசு பெற்றனர். சில புலவர்கள், மன்னரை தெய்வங்களுக்கு ஒப்பாக பாடி சாதாரண மக்களுகளின் எல்லைக்கு அப்பாற்படுத்தினர். இம்முன்று அரசும் மிகப்பெரிய பொருட்செலவில் பல சைவ-வைணவ ஆலயங்களை ஏழுப்பினர். தமிழ் தெய்வங்கள் அவர்கள் பெரிதாக முக்கியத்துவம் தரவில்லை. எனினும் தமிழ் மக்களிடையே குல தெய்வ வழிபாடு, தாய்-தெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு தொடர்ந்து பின்பற்றப்பட்டது. 


கல்லே பரவின் அல்லது,

நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” - (புறம் 335). 

விளக்கம்:- நடுகல்லாயினவரின் நடுகல்லைத் தொழுவதன்றி, நெல்லும் பூவும் சொரிந்து வழிபடக் கடவுளும் வேறு கிடையாது.

தென்னகத்திலே Iron Ageக்கு முன்னதாக காணப்படும் பெரும்நடுகற்கள் (Megalithic Monuments), உயரிய செயல் செய்வார்க்கும் கல் நடப்பட்டதை இது உணர்த்துகிறது. இந்த நெடுங்கல்லை மக்கள் வழிப்பட்டு வந்தனர். தமிழுக்கு இலக்கணம் இயற்றிய தொல்காப்பியர், நடுகல் அமைப்பதற்கும் இலக்கணம் வகுத்துயிருக்கிறார்.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்

சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று

இருமூன்று வகையிற் கல்லொடு புணர..”

(தொல். நூ. 1006). 

நடுகல்லாயினோர் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் தமிழ்மக்கள் போற்றினர். 

பின்னர், வர்க்க பாகுபாடுகளால், சிறு தெய்வம் (குலதெய்வம்) மற்றும் பெரும் தெய்வம் (சைவ-வைணவ கடவுள்) என பிரித்தனர். இன்றும் அந்த பாகுபாடு தொடர்கிறது. 

சோழர்காலத்திலே ஏற்ப்பட்ட சமய மாற்றத்திற்கு வித்திட்டது பல்லவ காலத்தில் ஏற்ப்பட்ட மாற்றம்தான். சோழப்பேரரசு  புகழ்உச்ச நிலையில் இருந்தபோது கங்கையும், கடாரமும், கலிங்கமும், இலங்கையும் அதன் அடிபணிந்தன. சைவசித்தான்தம் முழுவேகத்தில் வளர்ச்சி பெற்றது. சோழப் பேரரசு வளர்ந்தவேலையில் கோவில்களுக்கு நிலம், சொத்து, பொன் முதலிய செல்வங்கள் பெருகின. 

10-11ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்து பேரரசு போலவே, சோழபேரரசாலும், நிலமானிய முறை (Feudal Order) கடைபிடிக்கப்பட்டது. 

செங்கோலை நடத்தும்கோல், ஏர் அடிக்கும் சிறுகோலே” என்று பாடினார் கம்பர். இதை நன்கு உணர்ந்த பல்லவனும், சோழனும் நாட்டை திருத்தி உழவை வளர்த்தனர். பெரும் நிலக்கிழார்கள் உருவாயினர். ஆண்டான்-அடிமை உறவு உருவாகியது. “கத்தோலிக்க திருச்சபையைப்” போல, இங்கே பல கோவில்கள் மிகப்பெரிய நிலவுடைமை நிறுவனமாகவே விளங்கியது. பெருங்குடி மக்களும், குருமார்களும், மன்னரும் ஒன்றாக கைகோர்த்து தங்களது வர்த்தக நலனை காத்தனர். இந்தியாவில் உள்ள மற்ற பேரரசுகளும் இவ்வாறே இயங்கின. சாதிப்பாகுபாடு மிகக் கடுமையாக அனுஷ்டிக்கப்பட்டது. அரசனை மானுடபிறவியாக அல்லாமல் தெய்வமாகவே பார்க்கப்பட்டது. “திருவுடைமன்னரைக் கண்டால் திருமாலைக் கண்டேனே” என்று பாடிய நம்மாழ்வார். “பண்டு இராவணனைக் கட்டாண்மை தீர்த்த குலோத்துங்க சோழன்” என்று இராமனையே சோழ மன்னனாக்க் காண்கிறேன் என்றார் கோவைப்புலவர். மூவேந்தர்களும், தம் குடும்பத்தினர் இறந்தவர்களுக்கு அவர்களை புதைத்த இடத்தில் “பள்ளிப்படை”என்று கோவில்கள் எழுப்பினர்.

மனித வாழ்க்கை முறை, அரசியல் அமைப்பு, சமுதாய அமைப்பு, ஆகியவற்றின் காரணமாக பெரும் வழக்காக இருந்த தெய்வங்கள், வேறு சில காலங்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. ஆரியர் இந்தயாவிற்கு நுழைந்த காலத்தில் இந்திரன்தான் அவர்களின் தெய்வமாக இருந்தான். இதைபோல தமிழகத்தில் வணங்கப்பட்ட கொற்றவை பிற்காலத்தில் வேறு வடிவமும் குணமும் பெற்றுவிடுகிறாள். முருகன் சிவனுக்கு மைந்தனானான். பற்பல தனி தெய்வங்கள் இப்பொழுது “உறவுமுறை” கொண்டு வலம்வருகிறது. புராதான கதைகள் இன்றும் புதுப்புது பரிமாணம் கொண்டு வலம்வருகிறது. பிரெட்ரிக் எங்கெல்ஸ் (Friedrich Engels) கூறியதுபோல “இன்று எதை உண்மை என்று கருதுகிறோமோ அதில் அதன் பொய் அம்சமும் அடங்கியுள்ளது

வரலாற்றை அவ்வப்போது மீள்பார்வை பார்க்கவேண்டியது அவசியம். புதிய ஆய்வுகளின் ஒளியில், புதிய புரிதல்களின் அடிப்படையில் திரிபுகளைச் சரி செய்வதும் இடைவெளிகளை நிரப்பவதும் முக்கியம். அவ்வாறு செய்வது கடந்த காலத்துக்கு மட்டுமல்ல எதிர்காலத்துக்கும் நல்லது.

                          /*முற்றும்*/


    யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

    தீதும் நன்றும் பிறர்தர வாரா;

    நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;

    சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

    இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;


மெய்த்தேடல் முடிவதில்லை…

வாழ்க தமிழ்.

No comments:

Post a Comment