ஓரை (தமிழ்) மற்றும் ஹோராவும் (கிரேக்க- சமஸ்கிருதம்)
ஓரையும் ஹோராவும் ஒன்றா? ஒலி வடிவில் ஒன்றுபோலத் தோன்றுகிற இரண்டு சொற்களும் ஒன்றுதானா? கி.மு.5 நூற்றாண்டுக்கு முன்பு இருந்த தொல்காப்பியர், கி.பி.5ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் வழங்கிய ஹோராவைஎப்படி எடுத்திருக்க முடியும்? ஹோராதான் ஓரை ஆயிற்றா? ஓரை என்பது வேறு; ஹோரா என்பது வேறு அல்லவா? குதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்று கூறினானாமே ஒரு மேதை, அது போன்றல்லவா இருக்கிறது இது!
ஓரை என்னும் தமிழ்ச் சொல் வேறு, ஹோரா என்னும் கிரேக்க- சமஸ்கிருதச் சொல் வேறு. ஒலி வடிவில் இரண்டும் ஒரே சொல்லைப் போலக் காணபட்டாலும் இரண்டுக்கும் பொருள் வெவ்வேறு. ஹோரா என்னும் கிரேக்கச் சொல்லுக்குஇராசி அல்லது முகுத்தம் என்று வான நூலில் பொருள் கூறப்படுகிறது. ஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு மகளிர்கூட்டம் (ஆயம்) என்பது பொருள். பழைய சொற்கள் சிலவற்றின் பொருள் மறைந்து போய்விட்டது போல ஓரையின் பொருளும் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. மிகப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் இச்சொல்லின் பழைய பொருளை (கருத்தை) அறியாமல், இதை ஹோராவின் திரிபு என்று கருதித் தவறான உரையை எழுதிவிட்டனர்.
மறைத்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோர்க் கில்லை
(தொல்.பொருள் 135)
என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் வருகிற ஓரை என்பதற்குப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் எழுதிய பிழையான உரைகளைக் காண்க. உரையாசிரியர்கள் காட்டிய தவறான வழியில் சென்ற சிவராசரும் வையாபுரியாரும் இவ்வாறு தவறான கருத்துக் கொண்டதில் வியப்பொன்றும் இல்லை. இதற்குப் பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதியுள்ள நேரான உரை காண்க (சோமசுந்தர பாரதியார்,‘தொல்காப்பிய ஆராய்ச்சி’, அண்ணாமலைப்பல்கலைக்கழக இதழ், ஆறாம் தொகுதி, பக். 142 143. இதே கருத்தை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளகட்டுரையிலும் காணலாம்: (Journal of the Annamalai University, Vol. VI, p. 138). ஓரை என்னும் சொல்லுக்குப் பேராசிரியர் பாரதியார் அவர்கள் கூறும் விளக்கம் வருமாறு:-
“ஓரை - விளையாட்டென்பது, சங்க இலக்கியம் முழுவதும் அச் சொல்லுக்கு அப்பொருளாட்சியுண்மையால் விளங்கும். ஓரைக்கு இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளுண்மைக்குத் தொல் காப்பியத்திலேனும் சங்க இலக்கியம் எதிலேனும் சான்று காணுதலரிது. மிகவகன்ற பிற்காலப் புலவர் சிலர் முகூர்த்தம் (அதாவது ஒரு நாளினுள் நன்மை தீமைகளுக்குரியதாகப் பிரித்துக் கொள்ளப்படும் உட்பிரிவு) என்ற பொருளில் இச்சொல்லைப் பிரயோகிக்கலானார். அக்கொள்கைக்கே சான்றில்லாத சங்க இலக்கியத்தில், ‘ஓரை’ என்னுந் தனித் தமிழ்ச் சொல்லுக்கு, அக்காலத்திலக்கியங்களால் அதற்குரிய பொருளாகக் காணப்பெறும் விளையாட்டையே அச்சொல் குறிப்பதாகக்கொள் ளுவதே முறையாகும். அதை விட்டுப் பிற்கால ஆசிரியர் கொள்கையான இராசி அல்லது முகூர்த்தம் எனும்பொருளை இத்தமிழ்ச் சொல்லுக்கு ஏற்றுவதே தவறாகும். அதற்கு மேல் அச்சொல்லைக் கொண்டு தொல்காப்பியம்அடையப் பிற்காலத்து நூலென்று வாதிப்பது அறிவுக்கும் ஆராய்ச்சியறத்திற்கும் பொருந்தாது.”
ஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பேராசிரியர் சோமசுந்தர பாரதியாரவர்கள் விளையாட்டு என்று பொருள்கூறியுள்ளார். இது அச்சொல்லுக்கு மிக அண்மையான பொருளே. இதற்குச் சரியான பொருள் சிறுவர் சிறுமியர் வாழும்இடம் என்று தோன்றுகிறது. பழங்காலத்துத் திராவிட இனத்தார் தாங்கள் வாழ்ந்த கிராமத்திலுள்ள சிறுவர்கூட்டத்தையும் சிறுமியர் கூட்டத்தையும் வெவ்வேறாகப் பிரித்து அவர்களைத் தனித்தனியே வெவ்வேறு இடங்களில்வைத்து வளர்த்தார்கள். வடஇந்தியாவில் வாழ்ந்த திராவிடர்களும் இவ்வாறு சிறுவர் சிறுமியரை வெவ்வேறாகப் பிரித்து வைத்துள்ள இடத்துக்கு ஓரை என்று பெயர் கூறினார்கள் என்று தெரிகிறது.
வடஇந்தியாவிலும் ஆதிகாலத்தில் திராவிட இனமக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தார்கள். அந்தத் திராவிடர் இக்காலத்தில் ஆரியரோடு கலந்து மொழி, கலை, பண்பாடுகளில் மாறிப் போனார்கள். அவர்களில் சில இனத்தார் இன்றும் உள்ளனர். அவர்கள் தங்கள் பழைய இடங்களிலிருந்து துரத்தப்பட்டு வேறு இடங்களில் போய் வாழ்கிறார்கள். அவர்களில் முண்டா என்னும் திராவிட இனத்தார் சோட்டா நாகப்பூரில் இருக்கிறார்கள். அவர்களுடைய திராவிட மொழியில் இக்காலத்தில் மைதிலி, வங்காளி, இந்தி முதலான மொழிகளின் சொற்களும் கலந்துவிட்டன. ஆனாலும், பழைய திராவிட இனத்தவரின முண்டாரி மொழியில் ஓரை என்னும் சொல் இன்றும் வழங்குகிறது. இது ஹோரா என்னும் சொல்லின் திரிபு அன்று; பழைய திராவிடச் சொல்லாகும். முண்டா இனத்து மணமாகாத இளைஞர்களும் மணமாகாத இளம் பெண்களும் தங்கள் வீடுகளில் படுத்து உறங்குவதில்லை. அவர்களுக்கென்று தனித்தனியே பெரியகொட்டகை அமைக்கப்பட்டு அந்தக் கொட்டகையில் போய்ப் படுத்து உறங்குகிறார்கள். இந்தக் கொட்டகைகளுக்கு கிதிஓரா என்று அவர்கள் பெயர் கூறுகிறார்கள். ஆண் மக்களுக்குத் தனியாகக் கிதிஓராவும் இருக்கின்றன. முண்டாரிமொழியின் கிதிஓராவுடன் தமிழ் மொழியின் ஓரையை ஒப்பிட்டு நோக்குக. கிதிஓரா என்பதில் கிதி என்பதன் பொருள் தெரியவில்லை. ஓரா என்பது ஓரை என்பதில் சற்றும் ஐயமில்லை. எனவே, ஓரை என்பது திராவிட இனமொழிச் சொல் என்பது தெளிவாகத் தெரிகிறது. தொல்காப்பியர் இந்த ஓரையைத்தான் கூறியுள்ளார். இந்த ஓரை கிரேக்க - சமஸ்கிருத ஓரை அன்று.
மிகப் பழங்காலத்திலேயே திராவிட இனமக்கள் வாழ்ந்த ஊர்களில் சிறுவர்களுக்குத் தனியாகவும் சிறுமிகளுக்குத்தனியாகவும் ஓரா (ஓரை) என்னும் பெரிய கொட்டகைகளை அமைத்திருந்தனர் என்பது தெரிகிறது. இக்காலத்தில் பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறவர்கள் இதுபற்றியும் ஆராய்ந்தால் உண்மை கிடைக்கும். தொல்காப்பியர் காலத்திலும் தமிழ்த் திராவிடர்கள் தங்கள் இளைஞர் களுக்கும் மகளிர்க்கும் தனித்தனி ஓரைகளைக்கட்டி வைத்திருந்தனர் என்பதைத் தொல்காப்பியர் கூறுகிற ஓரை என்னுஞ் சொல்லிலிருந்து ஊகிக்கலாம். சங்கச்செய்யுட்களில் ஓரை (ஓரா) என்னுஞ் சொல் காணப் படுகிறது. சங்கப் புலவரான உலோச்சனாரும் ஓரை என்னுஞ்சொல்லை ஆள்கிறார். “ ஓரை மகளிரும் ஊரெய்தினரே” (நற்றிணை 398: 5) என்று அவர் கூறுவது காண்க. ஆகவே, சிவராசபிள்ளையும் வையாபுரிப்பிள்ளையும் மற்றவர்களும் தவறாகக் கருதுகிறபடி ஓரை என்னுஞ் சொல் கிரேக்க - சமஸ்கிருதச் சொல் அன்று. அது தூய திராவிட மொழிச் சொல் என்பதை அறிகிறோம். ஓரை என்னும் திராவிடச்சொல்லின் பழமையை அறியாத சிவராசர்களும் வையாபுரியார்களும் ஓரையைக் கூறுகிற தொல்காப்பியரை மிகமிகப்பிற்காலத்து வச்சிரநந்தி சங்கத்தில் இருந்தவர் என்று கூறுவது வரலாறு அறியாத போலிவாதம் ஆகும். திராவிடஇனத்து மக்கள் பழங்காலத்தில் வழங்கிவந்த ஓரா ஓரையைக் கூறுகிற தொல்காப்பியர் மிகமிகப் பழங்காலத்தில்இருந்தவர் என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது
நன்றி:- மயிலை சீனி வேங்கடசாமி
https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=295&pno=139
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏