தொல்காப்பியத்தில் கற்பியல்

 தொல்காப்பியத்தில் கற்பியல்:





   "கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் 
    மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
    விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
    பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்'       (1098)


விளக்கம்:- கற்பு எனும் மனத்திண்மை, தலைவன் மீது கொண்ட காதல், நல்லொழுக்கம், பொறுமை எனும் பெருங்குணம், நற்பண்புகளின் நிறை, விருந்தினரைப் பேணிக் காக்கும் தன்மை, சுற்றத்தாரை ஓம்பல் முதலானவை குடும்பத் தலைவியின் பண்புகளாகக் கூறுகின்றார் கற்பியலில் தொல்காப்பியர். 


"தற்புகழ்க் கிளவி கிழவன் முன் கிளத்தல் / எத்திறத் தானும் கிழத்திக்கு இல்லை' (1126)


விளக்கம்:- தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தாரை பற்றியும் வியந்து தலைவன் முன் புகழ்ந்து பேசும் எச்சூழலிலும் தலைவிக்கு இல்லாததொரு பண்பாக எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. 


"செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பா லான' (தொல்.1154) 


விளக்கம்:- அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையை உரைக்கும் சொல்வன்மை, நன்மை, தீமையைப் பிரித்தாராயும் அறிவு, அரும் பண்புகள் ஆகியவை பெண்டிரின் குணநலன்களாகத் தொல்காப்பியம் கூறுகின்றது.



                      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


கோடுகள் இல்லாத வரைபடம்

📚நூலின் பெயர்: கோடுகள் இல்லாத வரைபடம்

👨‍🏫ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

©️ வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம் - பக்கங்கள்: 88





உலகின் தலைசிறந்த பயணிகள் பற்றிய கட்டுரையின் தொகுப்பு இந்த நூல். இதில் எனக்கு மிகவும் கவர்ந்தது கட்டுரைகள்

🐪 இபின் பாதுதாவின் பயணம்

🚶யுவான்சுவாங்கின் பயணம், 

🚶சதிஸ் குமாரின் பயணம், 

🚗 லுடேவிக் ஹப்னரின் பயணம் (Ludovic Hubler)


🚗 Ludovic Hubler: பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த லுடேவிக் ஹப்னர் என்ற 25 வயது இளைஞன் 2003 ஆம் ஆண்டு hitchhiking செய்து உலகை சுற்றிவர முடிவு செய்தான். கிட்டத்தட்ட 1,70,000 கிலோ மீட்டர் தூரதையும், 59 நாடுகள், 1825 நாட்கள், பல கார்கள், டிரக்கள், ஒட்டகம், கழுதை சவாரி, படகு சவாரி, என்று தன் பயணம் முழுவதும் வாகனம் லிஃப்ட் கேட்டு பயணம் செய்தான்.


பயணத்தின் ஒரு பகுதியாக லுடேவிக் இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் தனக்கு பிடிக்காத பத்து விஷயங்கள் என்று ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். அதில், முக்கியமானது 

***”கோவிலைத் தவிர வேறு பொது வெளிகள் கிடையாது. மக்கள் ஒருவரோடு மற்றொருவர் சந்தித்து பேசிக்கொண்டு மகிழ கலாச்சார வெளிகள் கிடையாது”. 


“கோவில்கள் மிக முக்கிய வணிக மையமாகி விட்டிருக்கிறது"***





*************************************************

“𝗧𝗿𝗮𝘃𝗲𝗹𝗶𝗻𝗴 – 𝗶𝘁 𝗹𝗲𝗮𝘃𝗲𝘀 𝘆𝗼𝘂 𝘀𝗽𝗲𝗲𝗰𝗵𝗹𝗲𝘀𝘀, 𝘁𝗵𝗲𝗻 𝘁𝘂𝗿𝗻𝘀 𝘆𝗼𝘂 𝗶𝗻𝘁𝗼 𝗮 𝘀𝘁𝗼𝗿𝘆𝘁𝗲𝗹𝗹𝗲𝗿.” – 𝗜𝗯𝗻 𝗕𝗮𝘁𝘁𝘂𝘁𝗮

*************************************************

Animal Farm

நூலின் பெயர்:  Animal Farm 
நூல் ஆசிரியர் : George Orwell
பக்கங்கள்:143



தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள், இந்துக்களே ஒன்று கூடுங்கள், இஸ்லாமியர்களே ஒன்று கூடுங்கள், தமிழர்களே ஒன்று கூடுங்கள், இந்த சாதிக்காரர்கள் எல்லாம் ஒன்று கூடுங்கள்…

இப்படியான பல புரட்சி(?!) பேச்சுகளை இந்த உலகம் பார்த்து இருக்கு... ஆனா மக்களிடத்தில் புரட்சியை தூண்டிவிட்டு, அதில் பெரிதாக பயன் அடைவது இந்த புரட்சியை தூண்டி விட்டவர்கள்தான், சாமானிய மக்கள் எப்பவும் போல அல்லல்படும் வாழ்க்கை தான் வாழ்கிறார்கள்.... அவர்களது உழைப்பு சுரண்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது..

மன்னர்கள் காலத்தில் இருந்து சமீப காலம் வரை இருக்கும் சான்றுகளை பார்த்தாலே இது உண்மை என்று புரியும். இதன் அடிபடையாக கொண்டு இந்த நாவல் இயற்றப்பட்டுள்ளது. 


                ‘விலங்கு பண்ணை’யில் இருக்கும் 'பன்றிகள்' (Snowball and Napoleon) மற்ற விலங்குகளிடம் ‘மனிதனுக்கு’ எதிராக புரட்சி செய்ய தூண்டி விடுகிறது. புரட்சி வென்றால் அத்தனை விலங்குகளும் சமமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம் என்று பன்றி கூட்டம் மற்ற விலங்குகளிடம் கூறுகிறது. புரட்சி வெற்றியடைந்த உடன், பன்றிகள் அதிகாரத்தை எவ்வாறு தன்வயப்படுத்துகிறது என்றும்; பின்னர் பன்றிகளுக்குள் அதிகாரப் போட்டி எவ்வாறு நடைபெற்றது என்றும்; பின்னர் ‘நெப்போலியன்’ என்ற பன்றி எவ்வாறு வேட்டைநாய்களை வைத்து அதிகாரப் போட்டியை ஒடுக்கியது என்றும்; புரட்சியில் பங்கு பெற்ற மற்ற விலங்குகளின் வாழ்க்கை எவ்வாறு மாறியது என்றும் இந்த நாவல் அழகாக சித்தரித்து இருக்கிறது. 

                 ஒரு குழுவின் உறுப்பினராக இருந்து, பின்பு அந்த குழுவை வழிநடத்துகிறேன் என்ற பெயரில் எப்படி அதிகாரத்தை தன்வயப்படுத்தி பிறகு ராஜபோகம் அனுபவிக்கும் ‘மன்னர்கள்’/‘ஆளும் வர்க்கம்’ எப்படி உருவானார்கள் என்றும் இந்த கதையை நாம் அணுகலாம். 

                விலங்கு பண்ணையில் புரட்சி வென்றவுடன், பன்றிகளின் கூட்டம் சட்ட திட்டங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைத்துக் கொள்கிறது. இந்த நாவலில் ‘Squealer’ என்ற பன்றியின் வேலையே, மற்ற விலங்குகளிடம் 'நெப்போலியன்' என்ற தலைமை பன்றியை பற்றி புகழ்ந்து பேசுவதும் மற்ற விலங்குகளை அறியாமையிலேயே வைத்துக் கொள்வதுதான். நெப்போலியன் பன்றி ஒரு தியாகசுருவி, மற்ற விலங்குகாகத்தான் வாழ்கிறார், இவர் இல்லையேல் மீண்டும் மனிதன் நம்மை அடிமைப்படுத்துவான் என்று பயமுறுத்தி, மற்ற விலங்குகளை அடிமையைப் போல வேலை வாங்கும். ‘Minimus’ என்ற பன்றியின் வேலையே ‘நெப்போலியனை’ புகழ்ந்து ‘பாடல்கள்’ எழுதுவது. பண்ணையில் உள்ள மற்ற விலங்குகள் நெப்போலியன் பற்றிய பாடலை வரலாற்று காவியமாக திரும்பத் திரும்ப பாடவைப்பதுதான். 

அரசியல் சித்து விளையாட்டுகளை மிக லாவகமாக விலங்குகளை வைத்து விளக்கியுள்ளார் ஆசிரியர். 

‘பலவீனமும், அறியாமையும் இருக்கும் வரை, சுரண்டல் இறுதிவரை தொடரும் என்பதையும் இந்த நாவல் எடுத்துக்காட்டுகிறது.’


                ஜார்ஜ் ஆர்வெல் அவர்கள், ஜனநாயக சோசலிசத்தில் (Democratic socialism) என்ற இடதுசாரி அரசியல் மீது வலுவான நம்பிக்கை கொண்டவர். சர்வாதிகார சித்தாந்தத்தை (totalitarianism) கடுமையாக எதிர்த்தார். அதுவே அவரின் நாவல்களில் பிரதிபலித்தது. 



*************************************************

“All animals are equal; But some are more equal than others”


“People Who Elect Corrupt Politicians, Impostors, Thieves and Traitors are not Victims But Accomplices”


“War against a foreign country only happens when the moneyed classes think they are going to profit from it.

    • GEORGE ORWELL

*************************************************