நூலின் பெயர்: Animal Farm
நூல் ஆசிரியர் : George Orwell
பக்கங்கள்:143
தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள், இந்துக்களே ஒன்று கூடுங்கள், இஸ்லாமியர்களே ஒன்று கூடுங்கள், தமிழர்களே ஒன்று கூடுங்கள், இந்த சாதிக்காரர்கள் எல்லாம் ஒன்று கூடுங்கள்…
இப்படியான பல புரட்சி(?!) பேச்சுகளை இந்த உலகம் பார்த்து இருக்கு... ஆனா மக்களிடத்தில் புரட்சியை தூண்டிவிட்டு, அதில் பெரிதாக பயன் அடைவது இந்த புரட்சியை தூண்டி விட்டவர்கள்தான், சாமானிய மக்கள் எப்பவும் போல அல்லல்படும் வாழ்க்கை தான் வாழ்கிறார்கள்.... அவர்களது உழைப்பு சுரண்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது..
மன்னர்கள் காலத்தில் இருந்து சமீப காலம் வரை இருக்கும் சான்றுகளை பார்த்தாலே இது உண்மை என்று புரியும். இதன் அடிபடையாக கொண்டு இந்த நாவல் இயற்றப்பட்டுள்ளது.
‘விலங்கு பண்ணை’யில் இருக்கும் 'பன்றிகள்' (Snowball and Napoleon) மற்ற விலங்குகளிடம் ‘மனிதனுக்கு’ எதிராக புரட்சி செய்ய தூண்டி விடுகிறது. புரட்சி வென்றால் அத்தனை விலங்குகளும் சமமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம் என்று பன்றி கூட்டம் மற்ற விலங்குகளிடம் கூறுகிறது. புரட்சி வெற்றியடைந்த உடன், பன்றிகள் அதிகாரத்தை எவ்வாறு தன்வயப்படுத்துகிறது என்றும்; பின்னர் பன்றிகளுக்குள் அதிகாரப் போட்டி எவ்வாறு நடைபெற்றது என்றும்; பின்னர் ‘நெப்போலியன்’ என்ற பன்றி எவ்வாறு வேட்டைநாய்களை வைத்து அதிகாரப் போட்டியை ஒடுக்கியது என்றும்; புரட்சியில் பங்கு பெற்ற மற்ற விலங்குகளின் வாழ்க்கை எவ்வாறு மாறியது என்றும் இந்த நாவல் அழகாக சித்தரித்து இருக்கிறது.
ஒரு குழுவின் உறுப்பினராக இருந்து, பின்பு அந்த குழுவை வழிநடத்துகிறேன் என்ற பெயரில் எப்படி அதிகாரத்தை தன்வயப்படுத்தி பிறகு ராஜபோகம் அனுபவிக்கும் ‘மன்னர்கள்’/‘ஆளும் வர்க்கம்’ எப்படி உருவானார்கள் என்றும் இந்த கதையை நாம் அணுகலாம்.
விலங்கு பண்ணையில் புரட்சி வென்றவுடன், பன்றிகளின் கூட்டம் சட்ட திட்டங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைத்துக் கொள்கிறது. இந்த நாவலில் ‘Squealer’ என்ற பன்றியின் வேலையே, மற்ற விலங்குகளிடம் 'நெப்போலியன்' என்ற தலைமை பன்றியை பற்றி புகழ்ந்து பேசுவதும் மற்ற விலங்குகளை அறியாமையிலேயே வைத்துக் கொள்வதுதான். நெப்போலியன் பன்றி ஒரு தியாகசுருவி, மற்ற விலங்குகாகத்தான் வாழ்கிறார், இவர் இல்லையேல் மீண்டும் மனிதன் நம்மை அடிமைப்படுத்துவான் என்று பயமுறுத்தி, மற்ற விலங்குகளை அடிமையைப் போல வேலை வாங்கும். ‘Minimus’ என்ற பன்றியின் வேலையே ‘நெப்போலியனை’ புகழ்ந்து ‘பாடல்கள்’ எழுதுவது. பண்ணையில் உள்ள மற்ற விலங்குகள் நெப்போலியன் பற்றிய பாடலை வரலாற்று காவியமாக திரும்பத் திரும்ப பாடவைப்பதுதான்.
அரசியல் சித்து விளையாட்டுகளை மிக லாவகமாக விலங்குகளை வைத்து விளக்கியுள்ளார் ஆசிரியர்.
‘பலவீனமும், அறியாமையும் இருக்கும் வரை, சுரண்டல் இறுதிவரை தொடரும் என்பதையும் இந்த நாவல் எடுத்துக்காட்டுகிறது.’
ஜார்ஜ் ஆர்வெல் அவர்கள், ஜனநாயக சோசலிசத்தில் (Democratic socialism) என்ற இடதுசாரி அரசியல் மீது வலுவான நம்பிக்கை கொண்டவர். சர்வாதிகார சித்தாந்தத்தை (totalitarianism) கடுமையாக எதிர்த்தார். அதுவே அவரின் நாவல்களில் பிரதிபலித்தது.
*************************************************
“All animals are equal; But some are more equal than others”
“People Who Elect Corrupt Politicians, Impostors, Thieves and Traitors are not Victims But Accomplices”
“War against a foreign country only happens when the moneyed classes think they are going to profit from it.
- GEORGE ORWELL
*************************************************