கல்கி செய்த வரலாற்றுச் சிதைவு.. -தோழர் அருணன்

கல்கி செய்த வரலாற்றுச் சிதைவு.. -தோழர் அருணன்




மணிரத்னத்தின் "பொன்னியின் செல்வன்" கல்கியின் படைப்பை சிதைத்திடுமோ என்று பலரும் கவலைப்படுகிறார்கள்.

கல்கியின் படைப்பே வரலாற்றுச் சிதைவுதான்.

அந்த நாவலின் மையம் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் படுகொலை

அதைச் செய்தவர்கள் பற்றி உடையார் குடிக் கல்வெட்டு தெளிவாகக் கூறுகிறது. 

"அக் கொலைக்கு காரணமானோர் பிராமணர்கள் என்பதையும் அக்கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் பின்வரும் நால்வராவார், சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராசன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராசன், மலையனூரானான தேவதாசக் கிரமவித்தன்

இந்நால்வருள் இருவர் பஞ்சவன் பிரமாதிராசன், இருமுடிச்சோழ பிரமாதிராசன் என்னும் சிறந்த அரசியல் பட்டம் பெற்றோர் ஆவர். ஆதலின் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் உயர்நிலையில் இருந்தவர் என்பதில் ஐயமில்லை. அவ்வாறிருந்தும் ஏன் அரசிளங் குமாரரின் கொலைக்கு துணையாயினர் என்பது அறியக்கூடவில்லை" என்கிறார் சரித்திரப் பேராசிரியர் கே.கே.பிள்ளை. (தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்)..


அந்தக் கல்வெட்டில் "பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று துரோகிகளான பிரமாணிமார்" என்று வருவதோடு "பாப்பனச் சேரி" என்றும் தெளிவாக வருகிறது..

இந்தக் கொலையாளிகளின் பெயர்களை அப்படியே தனது நாவலில் பயன்படுத்திய கல்கி அவர்கள் பிராமணர்கள், சோழ அரசில் உயர் பதவி வகித்தவர்கள் என்பதை மறைத்து, பாண்டியநாட்டு ஒற்றர்கள் என்று சித்தரித்திருக்கிறார்.

அதாவது உள்நாட்டு துரோகிகளை வெளிநாட்டு எதிரிகளாக மாற்றி வரலாற்றுக்கு துரோகம் செய்திருக்கிறார்.

கொலைக்கான காரணம் தெரியவில்லைதான்.

ஆனால் சோழ சாம் ராஜியத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் அடுத்து பதவிக்கு வரப் போகிறவரைக் கொலை செய்ததில் சொந்தப் பகையைவிட அரசியல் பகை காரணமாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

சுந்தர சோழன் பிராமணிய மதத்திடம் மட்டுமல்லாது சமண, புத்த மதங்களிடமும் தன்மையாக நடந்து கொண்டான். உலகபுரம் எனும் ஊரில் 'சுந்தர சோழப் பெரும் பள்ளி' எனும் புவுத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது..

இவன் சமணத்தின்பால் மாச்சரியம் இல்லாமல் இருந்தான் என்கிறது வீரசோழிய உரைச் செய்யுட்கள்..

இவனது மூத்த மகனாம் ஆதித்த கரிகாலனும் அத்தகைய பரந்த மனப்பான்மை கொண்டவனாக இருந்திருக்கலாம்..

அது பிராமணிய மத பரவலுக்கு இடையூறானது என நினைத்து அந்த பிராமணர்கள் அவனைக் கொலை செய்திருக்கலாம்.

இப்படி ஊகிக்க வாய்ப்பு இருந்தும் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் பழியைத் தூக்கி பாண்டிய நாட்டுக்காரர்கள் மீது நாசூக்காகப் போட்டுவிட்டார் கல்கி.. கொலைகாரர்கள் பிராமணர்கள் எனும் உண்மையைச் சொன்னால் இந்த ஊகம் எழுந்துவிடும் என்பதால் அதை முழுமையாக மறைத்துவிட்டார்...

கல்கி அந்தக் காலத்து மதவிவகாரங்கள் எல்லாம் தெரியாதவர் அல்ல..

இதே நாவலில் சைவ, வைணவ போட்டி வந்திருக்கிறது. 'சிவகாமியின் சபதம்' நாவலிலோ புத்த பிட்சுவையே பிரதான வில்லனாகச் சித்தரித்திருக்கிறார்..

ஆதித்த கரிகாலன் விவகாரத்தில் மட்டும் கொலையாளிகளின் சாதி, மத பின்புலத்தை மறைத்து சரித்திர ஓட்டத்தை லாவகமாக திசை திருப்பிவிட்டார்..

பொன்னியின் செல்வன் சரித்திரக் கதைதான்..

அதில் சரித்திரம் எவ்வளவு, கதை எவ்வளவு என்பது கவனமான ஆய்வுக்குரியது. இதை அப்படியே தமிழரின் சரித்திரமாக நம்பி ஏமாந்து போகக் கூடாது.

நாவலுக்கே இந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது என்றால் படத்திற்கு எவ்வளவு எச்சரிக்கை தேவை என்பதை நேயர்கள் உணர்ந்து கொள்ளட்டும்..


                   🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


No comments:

Post a Comment