கூர்வாய் எறியுளி

 கூர்வாய் எறியுளி:-



தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் சிவாலயத்தின் சுற்றும் மண்டபத்தில் காணப்படும் தஞ்சை நாயகர்கள் கால ஓவியத் தொகுப்பில் மீனவர்கள் மீன் பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.


இக்காட்சி ஓவியத்தில் இரு மீனவர்கள் உள்ளனர். அதில் ஒருவர் படகினை செலுத்த மற்றொருவர் கையில் எறிஉளி ஏந்தி மீன் ஒன்றினை தாக்க முற்பட்ட கோளத்தில் திகழ்கிறான். இம்மீனவன் முன்னர் எறிந்த எறிஉளியால் தாக்கிய மீன் ஒன்று, தன் உடலை தொலைத்த அந்த எறிஉளியோடு நீரில் நீந்துகிறது. மீன் உடலை தொலைத்து மறுபுறம் வெளிவந்த எறிஉளி என்னும் ஈட்டியானது மூங்கில் கழியில் சேர்க்கப்பட்டுள்ளது. இம்மூங்கிலில் கழியுடன் இணைக்கப்பட்ட கயிறு படகில் கட்டப்பட்டுள்ளது.


இந்த ஓவியத்தில் காணப்பெறும் ஒவ்வொரு கூறும் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை பாடல்களில் குறிப்பிடப் பெற்றுள்ள செய்திகளை காட்டி நிற்பவனாக உள்ளன.


       “குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர்

        எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன்

         புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட..”

        (அகம்:210;1-3)


மேலும், 

உழவன் ஒருவன் விடியற்காலத்தே எழுந்து “விரால் மீனைப்” பிடித்து துண்டு துண்டாக வெட்டி மணக்கும் குழம்பு வைப்பதையும், அந்தக் குழம்புக்கு ஏற்றப்படி அரிசியால் செய்த சோற்றினைச் சேர்த்து உண்டு மகிழ்ந்ததையும்,


      “கருங்கண் வராஅல் பெருந்தடி மளிர்வையொடு

        புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு” 

        (நற்றி.60:4-6)


மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தன் தந்தைக்கு, மூரலாகிய வெண்சோற்றை ஆக்கி அதனோடு அயிலை மீனின் குழம்பு வைத்து கொழுமீன் கருவாட்டுடன் கொண்டு சென்றாள் பரதவப் பெண் என்பதை,


“உப்பு நொடைநெல்லின் மூரல் வெண்சோறு

அயிலை துழந்த அம்புளிச் சோறு

கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்”

(அகம்.60:4-6)


      🙏🙏🙏🙏🙏🙏🙏



ஊரும் பேரும்

 ஊரும் பேரும்




குறிஞ்சி நில ஊர்கள்:

  • மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன.
  • ஓங்கியுயர்ந்த நிலபகுதி - மலை
  • மலையின் உயரத்தில் குறைந்தது - குன்று
  • குன்றின் உயரத்தில் குறைந்தது - கரடு, பாறை
  • குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன.
  • மலையைக் குறிக்கும் வடசொல், "கிரி" என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோத்தகிரி என்பன மலையையொட்டி எழுந்த ஊர்பெயர்கள்.
  • குறிச்சி, ஆழ்வார்க்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, கள்ளக்குறிச்சி என்ற பெயர்கள் எல்லாம் குறிஞ்சி நில ஊர்களே, குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குறிச்சி ஆயிற்று.

முல்லை நில ஊர்கள்: (காடு, புரம், பட்டி, பாடி)

  • அத்தி(ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர் "ஆர்க்காடு" எனவும், ஆல மரங்கள் நிறைந்த ஊர் "ஆலங்காடு" எனவும், களாச்செடிகள் நிறைந்த ஊர் "களாக்காடு" எனவும் பெயரிட்டனர்.
  • காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத் திரியும் விலங்குகளால் தமக்கும், தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் "பட்டி, பாடி" என அழைக்கப்பட்டன. (காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல்பட்டி)

மருத நில ஊர்கள்: (ஊர், குடி, சோலை, பட்டி, குளம், ஏரி, ஊரணி)

  • நிலவளம், நீர்வளமும் பயிர்வளமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பும் "ஊர்" என வழங்கப்பட்டது.
  • ஆறுகள் பாய்ந்த இடங்களில் ஆற்றூர் என வழங்கப்பட்ட பெயர்கள் காலபோக்கில் "ஆத்தூர்" என மருவியது.
  • மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் மரங்களின் பெயரோடு ஊர் பெயரை சேர்த்து வழங்கினர். (கடம்பூர், கடம்பத்தூர், புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி).
  • குளம், ஏரி, ஊருணி ஆகியற்றுடன் ஊர் பெயர்களில் இணைத்து வழங்கினர். (புளியங்குளம், வேப்பேரி, பேராவூரணி)

நெய்தல் நில ஊர்கள்: (பட்டினம், பாக்கம், கரை, குப்பம்)

  • கடற்கரை பேரூர்கள் "பட்டினம்" எனவும், சிற்றூர்கள் "பாக்கம்" எனவும் பெயர் பெற்றிருந்தன.
  • பரதவர் வாழ்ந்த ஊர்கள் "கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை" எனப் பெயர் ரெற்றிருந்தன.
  • மீனவர்கள் வாழும் இடங்கள் "குப்பம்" என்று அழைக்கப்படுகிறது.

திசையும் ஊர்கள்: (ஊர், பழஞ்சி)

  •  நாற்றிசைப் பெயர்களும் ஊர்களுடன் குறிக்கப்பெற்றன. ஊருக்கு கிழக்கே இருந்த பகுதியை "கீழுர்" எனவும், மேற்கே இருந்த பகுதியை "மேலூர்" எனவும் பெயரிட்டனர்.

நாயக்க மன்னர்கள்:

  • நாயக்க மன்னர்கள் தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர்.
  • அவர்கள் ஊர்ப்பெயருடன் பாளையத்தை சேர்த்து வழங்கினர். (ஆரப்பாளையம், மதிகோன்பாளையம், குமாரப்பாளையம், மேட்டுப்பாளையம்)

ஊர் பெயர்கள் மாறுதல்:

  • கல்வெட்டுகளில் காணப்படும் "மதிரை" மருதையாகி இன்று "மதுரை"யாக மாறியுள்ளது.
  • கோவன்புத்தூர் என்னும் பெயர் "கோயமுத்தூர்" ஆகி, இன்று "கோவை" ஆக மருவியுள்ளது.
                  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


பெண் தர மறுத்ததால் பழங் குடிக்கும் ‘வம்ப வேந்தர்களுக்கும்’ போர்

 புறநானூறு 345

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு

திணை: காஞ்சி

துறை: மகட்பாற் காஞ்சி.

பாடியது: அடைநெடுங் கல்வியார் 


பாடல்:- 


களிறு அணைப்பக் கலங்கினகாஅ,

தேர் ஓடத் துகள் கெழுமினதெருவு;

மா மறுகலின் மயக்குற்றனவழி;

கலம் கழாஅலின்துறை கலக்குற்றன;

தெறல் மறவர் இறை கூர்தலின்,            5

பொறை மலிந்து நிலன் நெளிய,

வந்தோர் பலரேவம்ப வேந்தர்,

பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின்

ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி,

கருங் கண் கொண்ட நெருங்கல் வெம்முலை,          10

மையல் நோக்கின்தையலை நயந்தோர்

அளியர் தாமேஇவள் தன்னைமாரே

செல்வம் வேண்டார்செருப் புகல் வேண்டி,

'நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்என;

கழிப் பிணிப் பலகையர்கதுவாய் வாளர்,       15

குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு

கழாஅத் தலையர்கருங் கடை நெடு வேல்

இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ!

என் ஆவது கொல் தானே

பன்னல் வேலி இப் பணை நல் ஊரே!  20


விளக்கம்:-


வேந்தர்கள் அவளை விரும்புகின்றனர். அவளது தந்தை வேந்தர் தரும் செல்வத்தை விரும்பவில்லை. தனக்கு நிகரான போராளிக்குத் தன் மகளை மணம் முடித்துத் தரவே விரும்புகிறான். எனவே போர் மூண்டுள்ளது. பனைமரக் கருக்குமட்டை வேலி [பன் நல் வேலி] கொண்ட அவள் ஊர் என்ன ஆகுமோ?


படையுடன் வந்திருக்கும் புதியவர்கள் பலர்.

  • போர்யானைகள் தழுவுவதால் காடே கலகலத்துப் போயிருக்கிறது.
  • படையெடுத்து வந்த தேர்கள் ஓடுவதால் தெருவெல்லாம் ஒரே புழுதி.
  • படையெடுத்து வந்த குதிரைகள் திரிவதால் எது வழி என்றே தெரியாத நிலை.
  • கறை படிந்த அவர்களின் படைக்கருவிகளைக் கழுவுவதால் துறைநீரே கலங்குகிறது.
  • அழிக்கும் மறவர் கூட்டம் ஒன்று திரள்வதால் தாங்க முடியாமல் நிலமே நெளிகிறது.
  • இப்படி வந்திருக்கின்றனர்.

அவள்

  • எல்லாரும் விரும்பும் கருமையான முகட்டுக்கண்ணுடன் நெருங்கி நிற்கும் முலை கொண்டவள்.
  • முலையில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
  • இருபுறமும் வரையப்பட்டுள்ளது.
  • அது பூவோட்டம் [கண்ணி] காட்டும் ஓவியம்.
  • அவள் முலைக்குப் பாதுகாப்பாக வரையப்பட்ட ஓவியம்.
  • பெண்யானை பெருமூச்சு விடுவது போல வண்ணம் தெளித்து வரையப்பட்ட ஓவியம்.(spray) 
  • இரும்புக் கம்பியால் வரையப்பட்ட ஓவியம்.
  • அவளும் ஆசை கொட்டும் பார்வை கொண்டவள். [மையல் நோக்கு]
  • அவள் தையல். அழகெல்லாம் தைத்து வைக்கப்பட்ட பெண்.

இரக்கம்

  • அவளை வரும்பியவர்கள் இரக்கம் கொள்ளத்தக்கவராக ஆகிவிட்டனர்.
  • காரணம் அவளது தந்தையும், அண்ணனும்.

இவள் அண்ணனும், தந்தையும்

  • மணம் செய்துகொள்ள வந்தவர் தரும்செல்வத்தை விரும்பவில்லை.
  • போரில் மோத விரும்புகின்றனர்.
  • “போரில் எங்களுக்கு நிகராக நிற்கமுடியாதவருக்குப் பெண் தரமாட்டேன்”என்று சொல்லிக்கொண்டு போரில்இறங்கியுள்ளனர்.
  • பலகை என்னும் கவசத்தை அவிழ்க்கக்கூடிய கழிபிணி முடிச்சுப் போட்டுக்கட்டிக்கொண்டுள்ளனர்.
  • வெட்டி வீழ்த்தக்கூடிய வாளைக் கையில்ஏந்திக்கொண்டுள்ளனர்.
  • குழுவாகத் திரண்டுள்ளனர். [குழாம்]
  • போரிட்டபோது குருதி படிந்த தலையைக்கழுவாமல் அடுத்த போருக்காகக்காத்திருப்பவர்கள்.
  • சிலரது கைகளில் கழுவாமல் கறை படிந்தகருநிற வேலும் இருக்கிறது.
  • இப்படிப்பட்ட மறவர்களாக இருக்கிறார்கள்.

இந்த ஊர் என்ன ஆகுமோ?



கழிப்பிணி முடிச்சு அவர்கள் தம் கவசத்தை இந்தக் கழிப்பிணி முடிச்சுப் போட்டுக் கட்டிக்கொண்டனர
கழிப்பிணி முடிச்சு அவர்கள் தம் கவசத்தை இந்தக் கழிப்பிணி முடிச்சுப் போட்டுக் கட்டிக்கொண்டனர்

காவல் கண்ணி ஓவு (ஓவியம்)
அவளுக்கு இரண்டிலும் 
வரையப்பட்டிருந்தது



                          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏